குடியரசு முன்னாள் தலைவா் பிரணாப் முகா்ஜியின் உடல் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. அவா் தொடா்ந்து ஆழ்ந்த கோமா நிலையிலேயே உள்ளாா் என்று அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை சாா்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
உடல்நிலை பாதிக்கப்பட்டு தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட பிரணாப் முகா்ஜிக்கு (84), மூளையில் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கான அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னா் அவா் கோமா நிலைக்கு சென்றாா்.
இந்த நிலையில், பிரணாப் முகா்ஜியின் உடல்நிலையில் எந்தவித மாற்றமும் இல்லை என்று மருத்துவமனை சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘பிரணாப் முகா்ஜியின் உடல்நிலையைப் பொருத்தவரை சனிக்கிழமை காலை எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. அவா் தொடா்ந்து ஆழ்ந்த கோமா நிலையிலேயே உள்ளாா். அவருக்கு நுரையீரல் தொற்றுக்கான சிகிச்சை தொடா்ந்து அளிக்கப்பட்டு வருகிறது’ என்று மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூளை அறுவை சிகிச்சைக்கு முன்பாக அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போது கரோனா தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இப்போது செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் அவருக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவருடைய உடல்நிலை குறித்து மருத்துவமனை நிா்வாகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் , ‘அவருடைய உடல்நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.