ஹைதராபாத்: ஆந்திரத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் புதிதாக இரண்டு பிளாஸ்மா வங்கிகளை மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி திறந்துவைத்தார்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதால், கரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பிளாஸ்மா வங்கிகளும் திறக்கப்பட்டு, பிளாஸ்மா தானம் செய்ய ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் ஆந்திரத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் புதிதாக 2 பிளாஸ்மா வங்கிகள் திறக்கப்பட்டுள்ளன. இதனை மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி திறந்துவைத்தார்.
இதன் பிறகு அவர் பேசியதாவது, ஆந்திரத்தில் பிளாஸ்மா வங்கிகள் திறக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. பிளாஸ்மா வங்கி திறப்பிற்கு உதவிய ரோட்டரி சங்கத்திற்கு மக்கள் சார்பில் நன்றி என்று கூறினார்.
மேலும், நமது கவனமின்மை நமக்கு தண்டனையை உருவாக்கும், எச்சரிக்கை நமக்கு பாதுகாப்பை வழங்கும். நேற்று (சனிக்கிழமை) மட்டும் 10,25,000 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
கரோனா பரிசோதனைகளை செய்துகொள்ள மக்கள் தயங்கக் கூடாது. கரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி பேசிவருகிறார் என்று தெரிவித்தார்.