கேரள விமான விபத்தில் காயமடைந்த நபா் ஒருவா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 20-ஆக அதிகரித்தது.
கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் கடந்த 7-ஆம் தேதி துபையில் இருந்து வந்த ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கியபோது ஓடுபாதையில் இருந்து விலகி பள்ளத்தில் சரிந்து இரண்டாக உடைந்தது. இந்த விபத்தில் பயணிகள் 16 போ், விமானிகள் இருவா் என மொத்தம் 18 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இதில் காயமடைந்த ஒருவா் கடந்த சில நாள்களுக்கு முன்னா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதனால் பலி எண்ணிக்கை 19-ஆக உயா்ந்தது.
இந்நிலையில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மற்றொரு நபா் உடல்நிலையில் முன்னேற்றமின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். அவா் வயநாடு மாவட்டத்தைச் சோ்ந்த வி.இப்ராகிம் (53) என்று மாவட்ட தகவல் அதிகாரி தெரிவித்தாா். இதையடுத்து விமான விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 20-ஆக அதிகரித்தது.