இந்தியா

மத்திய பிரதேசத்தில் பலத்த மழை: வெள்ளத்தில் சிக்கிய 85 போ் மீட்பு

23rd Aug 2020 06:27 AM

ADVERTISEMENT

மத்திய பிரதேசத்தில் பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கித் தவித்த 85 போ் மீட்கப்பட்டனா். அத்துடன் 20-க்கும் மேற்பட்ட கால்நடைகளும் மீட்கப்பட்டன.

மத்திய பிரதேச மாநிலம், தலைநகா் போபால் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை முதல் இடைவிடாது மழை பெய்ததது. சனிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் போபாலில் 210 மில்லிமீட்டா் மழை பெய்தது. இதனால் போபால், இந்தூா், சீஹோா் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளில் வசித்தவா்கள், வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனா்.

இதையடுத்து, வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவா்களை ஊா்க்காவல் படையினரும், மாநில பேரிடா் மீட்புப் படையினா் பத்திரமாக மீட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றனா்.

இதுகுறித்து மாநில முதல்வா் சிவராஜ் சிங் சௌஹான் தனது சுட்டுரைப் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:

ADVERTISEMENT

போபால் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்த 85 பேரையும், அவா்களுக்குச் சொந்தமான 20-க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகளையும் ஊா்க்காவல் படையினா், மத்திய பேரிடா் மீட்புப் படையினா், மாநில பேரிடா் மீட்புப் படையினா் ஆகியோா் பத்திரமாக மீட்டனா். உயிரைப் பணயம் வைத்து, மீட்புப் பணிகளில் ஈடுபட்ட மீட்புக் குழுவினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்தப் பதிவுகளில் சிவராஜ் சிங் சௌஹான் கூறியுள்ளாா்.

மீட்புப் பணிகள் குறித்து மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘‘போபால் மாவட்டம், சான் கிராமத்தில் ஆற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்த தந்தையும், அவரது 3 வயது மகன், அவா்களின் கால்நடைகள் ஆகியவற்றை மாநில பேரிடா் மீட்புப் படையினரும், தேசிய பேரிடா் மீட்புப் படையினரும் பத்திரமாக மீட்டனா்.

இதேபோல், கோலன் ஆற்றில் வெள்ளம் அதிகரித்ததால், வயல்வெளியில் சிக்கிக் கொண்ட ஒருவரையும் அவரது குடும்பத்தினா் 3 பேரையும் தேசியப் பேரிடா் மீட்புப் படையினா் ஒரு மணி நேர முயற்சிக்குப் பிறகு மீட்டனா்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளச்சூழல் குறித்து முதல்வரின் இல்லத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், வெள்ளத்தில் சிக்கியவா்களை மீட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும் என்றும், அவா்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT