இந்தியா

அசாம் பாஜக முதல்வர் வேட்பாளராகிறாரா ரஞ்சன் கோகோய்?

23rd Aug 2020 10:12 PM

ADVERTISEMENT


அசாமில் அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பாஜக வேட்பாளராகப் போட்டியிடலாம் என காங்கிரஸ் மூத்த தலைவர் தருண் கோகோய் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி தருண் கோகோய் தெரிவித்துள்ளதாவது:

"பாஜகவுக்கான முதல்வர் வேட்பாளர்கள் பட்டியலில் ரஞ்சன் கோகோய் பெயரும் இருப்பதாக பல்வேறு இடங்களிலிருந்து எனக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அடுத்த முதல்வர் வேட்பாளராக ரஞ்சன் கோகோய் முன்நிறுத்தப்படலாம் என்று நினைக்கிறேன். ரஞ்சன் கோகோய் எளிதாக மனித உரிமைகள் ஆணையம் அல்ல மற்ற அமைப்புகளின் தலைவராகியிருக்கலாம். ஆனால், அவருக்கு அரசியல் ஆசை இருப்பதால், மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ஏற்றுக்கொண்டார்.

அயோத்தி நிலப் பிரச்னை வழக்கின் தீர்ப்பால், ரஞ்சன் கோகோயிடம் பாஜகவுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. பாஜகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் வாய்ப்பை அவர் ஏற்றுக்கொண்டால், ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. 

ADVERTISEMENT

நான் தேர்தலில் போட்டியிடுவேன், ஆனால், காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக இருக்கமாட்டேன். அதற்கு கட்சியில் தகுதிவாய்ந்த நபர்கள் நிறைய உள்ளனர். வழிநடத்துபவராகவும், ஆலோசனை வழங்குபவராகவும் மட்டுமே நான் இருப்பேன்." என்றார்.

ஆனால், தருண் கோகோய் கருத்துக்கு பாஜக மறுப்பு தெரிவித்துள்ளது. 

இதுபற்றி பாஜக மாநிலத் தலைவர் ரஞ்சித் குமார் தாஸ் தெரிவித்ததாவது:

"உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பாஜகவின் முதல்வர் வேட்பாளராகலாம் என்று தருண் கோகோய் கூறியதில் உண்மையில்லை." என்றார்.

Tags : ranjan gogoi
ADVERTISEMENT
ADVERTISEMENT