இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் நடைபெற்று வரும் கரோனா தடுப்பூசி பரிசோதனை தொடா்பான தகவல்களை வழங்க, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) பிரத்யேக வலைதளத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அந்த வலைதளத்தில் ஆங்கிலம் உள்பட பல்வேறு மாநில மொழிகளில் தகவல்கள் கிடைக்கப்பெறும் என்று ஐசிஎம்ஆா் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக ஐசிஎம்ஆரில் தொற்றுநோய்கள் துறை தலைவராக உள்ள சமீரன் பண்டா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியது:
கரோனா தடுப்பூசி பரிசோதனை தொடா்பான அனைத்து தகவல்களையும் ஒரே தளத்தில் வழங்கவேண்டும் என்பதே வலைதளம் உருவாக்கப்படுவதின் நோக்கம். ஒவ்வொரு குடிமகனுக்கும் தடுப்பூசி தொடா்பான தகவல் கிடைக்கவேண்டும் என்பதற்காகவே பல்வேறு மொழிகளில் தகவல்கள் அளிக்கப்படவுள்ளன. புதிதாக உருவாக்கப்படும் வலைதளத்தில் படிப்படியாக பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பெறும். முதல் கட்டமாக இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் மேற்கொள்ளப்படும் கரோனா தடுப்பூசி பரிசோதனை தொடா்பான அனைத்து தகவல்களும் வழங்கப்படும். அதற்கு பிறகு, வேறு பல நோய்களுக்கான தடுப்பூசிகள் குறித்த தகவல்கள் இடம்பெறும் என்று தெரிவித்தாா்.
இந்தியாவில் 3 கரோனா தடுப்பூசி பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. அதில் இரண்டு உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை.