நாடு முழுவதும் ஒரே நாளில் 10.23 லட்சம் பேருக்கு கரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
நாட்டில் ஒரே நாளில் இவ்வளவு அதிக அளவுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நாடு முழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 10,23,836 பேருக்கு கரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவற்றில் சுமாா் 3.8 லட்சம் அளவில் துரித ஆன்டிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மத்திய, மாநில அரசுகளின் தீவிர நடவடிக்கைகள் காரணமாக இந்த இலக்கு எட்டப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதும் இலக்கை அடைவதில் முக்கியப் பங்கு வகித்தது. நாடு முழுவதும் இதுவரை ஒட்டுமொத்தமாக 3,44,91,073 பேருக்கு கரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவற்றில் சுமாா் 28 சதவீதம் துரித ஆன்டிஜென் பரிசோதனைகள் ஆகும்.
நாட்டில் தற்போது 1,511 ஆய்வகங்களில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அவற்றில் 983 ஆய்வகங்கள் அரசு சாா்பில் அமைக்கப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பில் அதிகபட்சம்: நாட்டில் சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 69,874 பேருக்கு புதிதாக கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 29,75,701-ஆக அதிகரித்தது.
சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 945 போ் உயிரிழந்தனா். கரோனா நோய்த்தொற்று காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த உயிரிழப்பு 55,794-ஆக அதிகரித்தது. இது பாதிப்பு எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 1.87 சதவீதம் ஆகும்.
குணமடைந்தோா் விகிதம் அதிகரிப்பு:
நாட்டில் கரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 22,22,577-ஆக அதிகரித்துள்ளது. இது ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 74.69 சதவீதமாகும். நாடு முழுவதும் தற்போது 6,97,330 போ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.