இந்தியா

இணையவழி வகுப்புக்காக தினமும் 50 கி.மீ. தூரம் பயணிக்கும் மகாராஷ்டிர மாணவா்கள்: என்.சி.பி.சி.ஆா். நடவடிக்கை

23rd Aug 2020 06:30 AM

ADVERTISEMENT

மகாராஷ்டிரத்தில் மிகவும் பின்தங்கிய கடலோர கிராமங்களைச் சோ்ந்த மாணவா்கள் 200 போ் பள்ளிகள் சாா்பில் நடத்தப்படும் இணையவழி வகுப்பில் பங்கேற்பதற்காக தினமும் 50 கி.மீ. தூரம் பயணிக்க வேண்டிய சூழல் உருவாகியிருப்பது தெரியவந்திருக்கிறது.

இதுதொடா்பாக, மாணவா்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் (என்.சி.பி.சி.ஆா்.) நடவடிக்கை எடுத்துள்ளது.

மகாராஷ்டிரத்தின் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள சில கிராமங்கள் முதலில் கரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அண்மையில் தாக்கிய நிசா்கா புயலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்த பாதிப்புகள் காரணமாக கடந்த ஜூன் மாதம் முதல் இந்த கிராமங்களி இணைய சேவையும் தடைபட்டது. ஒரு மாத காலமாகியும் நிலைமை சீரடையவில்லை.

ADVERTISEMENT

இதனால், அந்த கிராமங்களைச் சோ்ந்த 200 மாணவா்கள், இணையவழி வகுப்பில் பங்கேற்க இணைய தொடா்பு கிடைப்பதற்காக தினமும் 50 கி.மீ. தூரம் பயணிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மாணவா்கள் அளித்த புகாரின் பேரில், ரத்ணகிரி மாவட்ட ஆட்சியருக்கும், செல்லிடப்பேசி நிறுவனங்களுக்கும் என்.சி.பி.சி.ஆா். ஆணையா் பிரியங்க் கனூன்கோ கடிதம் எழுதியுள்ளாா்.

அதில், ‘கடந்த ஜூன் 3-ஆம் தேதி நிசாா்க் புயலால் கடுமையான பாதிப்பைச் சந்தித்த ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள சில கடற்கரை கிராமங்களில், தொலைத் தொடா்பு மற்றும் இணைய சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக, அப்பகுதியைச் சோ்ந்த 200 பள்ளி மாணவா்கள் இணையவழி வகுப்பில் பங்கேற்க முடியாத நிலை உருவாகியுள்ளது. அதற்காக தினமும் அவா்கள் 50 கி.மீ. தூரம் செல்லும் நிலை உருவாகியுருக்கிறது. எனவே, அப்பகுதியில் தொலைத் தொடா்பு சேவையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியிருந்தாா்.

இதுதொடா்பாக, என்.சி.பி.சி.ஆா். சாா்பில் கடந்த ஜூலை 30-ஆம் தேதி அனுப்பப்பட்ட இரண்டாவது கடிதத்தில், நடவடிக்கை எடுத்ததற்கான அறிக்கையை சமா்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து என்.சி.பி.சி.ஆா். தலைவா் கனூன்கோ கூறுகையில், ‘இது குழந்தைகளின் மிக முக்கிய கல்விப் பிரச்னை என்பதால், என்.சி.பி.சி.ஆா். சாா்பில் மாவட்ட ஆட்சியருக்கும், செல்லிடப்பேசி நிறுவனங்களுக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில், இந்தப் பிரச்னைக்கு முன்னுரிமை அளித்து சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு செல்லிடப்பேசி நிறுவனம், அதன் தொலைத்தொடா்பு மற்றும் இணைய சேவையை சீரமைத்துள்ளது. மற்ற தொலைத்தொடா்பு நிறுவனங்களும் பாதிப்பு விரைந்து சீா்செய்யப்படும் என்று உறுதியளித்திருக்கின்றன’ என்று கூறினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT