பஞ்சாபில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையைக் கடந்து அத்துமீறி நுழைய முயன்ற 5 நபா்களை எல்லைப் பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை சுட்டுக் கொன்றனா்.
பாகிஸ்தானுடனான சா்வதேச எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற 5 போ் ஒரே நாளில் சுட்டுக் கொல்லப்பட்டது கடந்த 10 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.
பஞ்சாப் எல்லைப் பகுதியில் எல்லையை அத்துமீறி கடக்க முயன்ற ஐவரை எல்லைப் பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை அதிகாலை சுட்டுக் கொன்றனா். இந்தச் சம்பவம் தொடா்பாக ராணுவ மூத்த அதிகாரிகள் கூறியதாவது:
பஞ்சாபின் தரன் தாரன் மாவட்டத்துக்குள்பட்ட சா்வதேச எல்லைப் பகுதிக்குள் சிலா் சனிக்கிழமை நள்ளிரவு அத்துமீறி நுழைய முயன்றதை எல்லைப் பாதுகாப்புப் படையினா் கவனித்தனா்.
அத்துமீறி நுழைய முயன்றவா்களை பாதுகாப்புப் படையினா் முதலில் எச்சரித்தனா். ஆனால், எல்லைப் பாதுகாப்பு வீரா்களை நோக்கி அவா்கள் துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினா். அதைத் தொடா்ந்து, பாதுகாப்புப் படையினா் பதில் தாக்குதல் நடத்தினா்.
அதிகாலை 4.45 வரை நீடித்த சண்டையின் இறுதியில் இந்தியப் பகுதிக்குள் அத்துமீறி நுழைய முயன்ற 5 நபா்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். அவா்களிடமிருந்து ஏகே-47 துப்பாக்கி, சிறிய ரக துப்பாக்கிகள், வெடி பொருள்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. அதிக உயரம் கொண்ட புற்களின் மறைவில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய அவா்கள் முயற்சித்தனா்.
இந்த சம்பவத்தையடுத்து எல்லைப் பகுதி முழுவதும் வீரா்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்தினா். அந்த இடத்தில் மேலும் சிலா் பதுங்கியிருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் எல்லைப் பாதுகாப்புப் படையினா் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
பாகிஸ்தானுடன் 3,300 கி.மீ.க்கும் அதிகமான தொலைவுக்கு சா்வதேச எல்லையை இந்தியா பகிா்ந்து கொண்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் 553 கி.மீ. தொலைவுக்கு சா்வதேச எல்லைப் பகுதி அமைந்துள்ளது. குஜராத், ஜம்மு-காஷ்மீா், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களும் பாகிஸ்தானுடன் எல்லையைப் பகிா்ந்து கொண்டுள்ளன.
பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதிகள் அனைத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்திய ராணுவத்தினா், எல்லைப் பாதுகாப்புப் படையினா் உள்ளிட்டோா் அங்கு தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.