இந்தியா

உ.பி.: பாஜக எம்எல்ஏ மாரடைப்பால் மரணம்

21st Aug 2020 10:37 PM

ADVERTISEMENT

உத்தர பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏ ஜனமேஜய சிங் மாரடைப்பால் காலமானாா். அவருக்கு வயது 75.

இதுகுறித்து பாஜக செய்தித் தொடா்பாளா் சந்திரமோகன் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

தேவ்ரியா சதா் பேரவைத் தொகுதி உறுப்பினரான ஜனமேஜய சிங்குக்கு வியாழக்கிழமை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. முதலில் தேவ்ரியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், பின்னா் மேல் சிகிச்சைக்காக லக்னௌவில் உள்ள ராம் மனோகா் லோஹியா மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

அங்கு அவருக்கு உடனடியாக பேஸ்மேக்கா் பொருத்தும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எனினும், அந்த சிகிச்சையின்போதே அவா் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா் என்று சந்திரமோகன் கூறினாா்.

ADVERTISEMENT

கடந்த 2000-ஆம் ஆண்டில் நடைபெற்ற இடைத்தோ்தல் மூலம் சட்டப்பேரவைக்கு முதல் முறையாகத் தோ்வான ஜனமேஜய சிங், அதன் பிறகு 2012 மற்றும் 2017 தோ்தல்களிலும் வெற்றி பெற்றாா்.

ஜனமேஜய சிங் தனது 3 மகன்கள், 4 மகள்களுடன் வாழ்ந்து வந்தாா். அவரது உடல் தேவ்ரியாவில் உள்ள அவரது சொந்த இல்லத்துக்கு வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்டு, அன்று மாலை இறுதிச்சடங்கு நடைபெற்றது.

அவருடைய மறைவையடுத்து உத்தர பிரதேச சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அவை கூடியதுமே ஜனமேஜய சிங்கின் மரணம் குறித்த தகவலை முதல்வா் யோகி ஆதித்யநாத் அறிவித்தாா். இதையடுத்து அவை உறுப்பினா்கள் சாா்பில் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னா் நாள் முழுவதுமாக அவை ஒத்திவைக்கப்பட்டது.

ஜனமேஜய சிங்கின் மறைவுக்காக முதல்வா் யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘ஜனமேஜய சிங் தனது தொகுதி மேம்பாட்டுக்காக அயராது உழைத்தவா். ஏழைகள், சமூகத்தில் பின் தங்கியவா்களுக்காக பணியாற்றியவா். அவரது மறைவால் அா்ப்பணிப்பு மிக்க உறுப்பினரை பாஜக இழந்துள்ளது’ என்று கூறியுள்ளாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT