இந்தியா

தூய்மை நகரம் இந்தூர்: தூய்மைப் பணியாளர்கள் கொண்டாட்டம்

21st Aug 2020 11:08 AM

ADVERTISEMENT

இந்தியாவின் தூய்மையான நகரங்கள் பட்டியலில் நான்காவது முறையாக மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரம் முதலிடம் பிடித்துள்ளதை அப்பகுதி தூய்மைப் பணியாளர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பணியை சிறப்பாக மேற்கொள்ளும் நகரங்கள் மற்றும் மாநிலங்களுக்கு, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் விருதுகள் வழங்கப்படுகின்றன. 

அந்த வகையில், இந்த ஆண்டிற்கான, தூய்மையான நகரங்கள் பட்டியலை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நேற்று (வியாழக் கிழமை) வெளியிட்டார். இதில் மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர் முதலிடம் பிடித்தது. 

இதனை கொண்டாடும் விதமாக இந்தூர் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் இனிப்புகளை வழங்கி ஆடிப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த கொண்டாட்டத்தில் தூய்மைப் பணியாளர் ஒருவர் காந்தியை போன்று உடையணிந்து கலந்துகொண்டார். 

ADVERTISEMENT

இது தொடர்பாக பேசிய இந்தூர் நகராட்சி ஊழியர்கள் கூட்டமைப்பின் தலைவர் உமாகாந்த் காலே, ''கரோனா தடுப்பு பணியின்போது கிருமிநாசினி தெளிக்கும் பணியில் பலர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். எனினும் முன்களப் பணியாளர்களாக தங்களது சேவைகளை அவர்கள் தொடர்ந்து அளித்து வந்தனர்.

கரோனா தொற்றால் தூய்மைப் பணியாளர்கள் பலர் பாதிக்கப்பட்டனர். எனினும் நகராட்சி நிர்வாகத்தின் முறையான சிகிச்சையால் அவர்கள் குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளனர்.

பெருந்தொற்று காலத்திலும் பணிக்கு வருவதில் தூய்மைப் பணியாளர்கள் யாரும் தயக்கம் காட்டவில்லை. நகராட்சி சார்பில் முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

கரோனா பாதிப்பால் இரண்டு தூய்மைப் பணியாளர்கள் உயிரிழந்தனர். அவர்களது குடும்பத்திற்கு தேவையான உதவிகளை மற்ற ஊழியர்கள் செய்து வருகிறோம். நான்காவது முறையாக தூய்மை நகரங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த முறையும் முதலிடம் பிடிக்க முயற்சித்து பணிகளை தொடருவோம்'' இவ்வாறு அவர் கூறினார்.

Tags : mathya pradesh
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT