இந்தியா

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை

21st Aug 2020 07:00 PM

ADVERTISEMENT

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றும் வரும் பின்னணிப் பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்திய திரையுலகில் பல்வேறு மொழிகளில் பாடி சாதனை புரிந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கடந்த 5-ஆம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 

இதனையடுத்து சென்னை சூளைமேட்டில்  உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லேசான  கரோனா தொற்று உள்ளது என்றும், இரு தினங்களில் குணமடைந்து வீடு திரும்பி விடுவேன் என்றும் விடியோவில் அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

எனினும் கடந்த 13-ஆம் தேதி அவரது உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். 

ADVERTISEMENT

செயற்கை சுவாசக்கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும், மருத்துவ குழுவின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து எஸ்.பி பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என திரையுலக பிரபலங்கள் உள்பட பொதுமக்கள் பலர் நேற்று (வியாழக்கிழமை) பிரார்த்தனை செய்தனர்.

இந்த நிலையில், பிரார்த்தனையின் பலனாக இன்று (வெள்ளிக்கிழமை) மாலை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், அவரது உடல்நிலை தேறிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், "எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல் நிலை சீராக உள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில், செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT