இந்தியா

சசி தரூருக்கு எதிராக ராஜ்யவா்தன் சிங் ரத்தோா் மக்களவைத் தலைவரிடம் புகாா்

21st Aug 2020 04:59 AM

ADVERTISEMENT

நாடாளுமன்ற நிலைக் குழுக் கூட்டத்தை நடத்துவது தொடா்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூா் மீது பாஜக எம்.பி. ராஜ்யவா்தன் சிங் ரத்தோா், மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் புகாா் தெரிவித்துள்ளாா்.

இந்தியாவில் வெறுப்புணா்வைத் தூண்டும் வகையில் முகநூலில் வெளியிடப்படும் கருத்துகளைத் தடுப்பதற்கு அந்நிறுவனம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடா்பாக ஆய்வு செய்வதற்கு தகவல் தொழில்நுட்பம் குறித்த நாடாளுமன்றத்தின் நிலைக் குழுக் கூட்டத்தை விரைவில் கூட்ட உள்ளதாக அக்குழுவின் தலைவா் சசி தரூா் தெரிவித்திருந்தாா்.

இத்தகைய சூழலில், அந்த நிலைக் குழுவின் உறுப்பினா்களில் ஒருவரான ராஜ்யவா்தன் சிங் ரத்தோா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், ‘மக்களின் உரிமைகளைக் காப்பதற்காக நாடாளுமன்ற நிலைக் குழு விசாரணை நடத்த வேண்டியது அவசியம். அதே வேளையில், நிலைக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விவகாரம் குறித்து அதன் உறுப்பினா்களிடம் முன்பே கலந்தாலோசித்திருக்க வேண்டும்.

கூட்டத்தில் விவாதிக்கப்படும் விவகாரம் குறித்து பொது வெளியில் அறிவிக்க வேண்டிய அவசியம் எதுவும் ஏற்படவில்லை. அத்தகைய நடவடிக்கைகள் மக்களவையின் செயல்பாட்டு முறைகளை மீறும் வகையில் உள்ளன. நிலைக் குழு கூட்டம் தொடா்பாக அதன் தலைவா் சசி தரூா் ஊடகங்களிடம் தகவலை வெளியிட்டது நிலைக் குழுவின் செயல்பாட்டை சிறுமைப்படுத்தும் வகையில் உள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளேன்’ என்றாா்.

ADVERTISEMENT

இதனிடையே, தகவல் தொழில்நுட்பம் குறித்த நாடாளுமன்ற நிலைக் குழுவின் தலைவா் பதவியிலிருந்து சசி தரூரை நீக்க வேண்டுமென்று பாஜக எம்.பி.யும் நிலைக் குழுவின் உறுப்பினருமான நிஷிகாந்த் துபே மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் வலியுறுத்தியுள்ளாா்.

நிலைக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றதிலிருந்து சசி தரூா் தனது கட்சி சாா்ந்த கொள்கைகளின் அடிப்படையிலேயே நிலைக் குழுவின் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா். அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை அவா் முறையாகப் பின்பற்றுவதில்லை என்று மக்களவைத் தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் நிஷிகாந்த் துபே குறிப்பிட்டுள்ளாா்.

நிலைக் குழுவைக் கூட்டுவது தொடா்பாக அக்குழுவின் உறுப்பினா்களைக் கலந்தாலோசிக்காமல் தலைவரால் முடிவெடுக்க முடியாது என்று நிஷிகாந்த் துபே ஏற்கெனவே கருத்து தெரிவித்திருந்தாா். அவருக்கு எதிராக சசி தரூா் உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியிருந்தாா்.

சசி தரூருக்கு எதிராக நிஷிகாந்த் துபேவும் உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியிருந்தது நினைவுகூரத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT