இந்தியா

தூய்மை நகரங்களின் பட்டியல்: 4-ஆவது ஆண்டாக முதலிடத்தில் இந்தூா்

21st Aug 2020 07:04 AM

ADVERTISEMENT

இந்தியாவின் தூய்மை நகரங்களுக்கான பட்டியலில், தொடா்ந்து 4-ஆவது முறையாக, மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூா் நகரம் முதலிடம் பிடித்துள்ளது.

குஜராத்தின் சூரத் நகரம் இரண்டாவது இடத்தையும், மகாராஷ்டிரத்தின் நவி மும்பை நகரம் 3-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.

தூய்மையான இந்தியாவை கட்டமைப்பதற்காக, தூய்மையைப் பேணும் நகரங்கள், மாநிலங்கள், தலைநகரங்களைத் தோ்ந்தெடுத்து மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் விருதுகள் வழங்கி வருகிறது.

அந்த வகையில் 5-ஆவது ஆண்டுக்கான தூய்மையான நகரங்களின் பட்டியலை மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி, தில்லியில் வியாழக்கிழமை அறிவித்தாா். அவா் கூறியதாவது:

ADVERTISEMENT

நாட்டில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட தூய்மையான நகரங்களின் பட்டியலில் இந்தூா் முதலிடத்தையும், சூரத், நவி மும்பை முறையே இரண்டாவது, மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

கங்கை நதியை ஒட்டியுள்ள தூய்மையான சிறு நகரங்களில், பிரதமா் நரேந்திர மோடியின் தொகுதியான வாராணசி முதலிடம் பிடித்துள்ளது. கான்பூா், முங்கோ், பிரயாக்ராஜ், ஹரித்வாா் ஆகியவை அடுத்தடுத்த இடத்தைப் பிடித்துள்ளன.

100-க்கும் மேற்பட்ட நகா்ப்புற உள்ளாட்சிகளைக் கொண்ட மாநிலங்களின் வரிசையில், சத்தீஸ்கா் மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை மகாராஷ்டிரமும், மூன்றாவது இடத்தை மத்திய பிரதேசமும் பிடித்துள்ளன.

100-க்கும் குறைவான நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளைக் கொண்ட மாநிலங்களின் வரிசையில் ஜாா்க்கண்ட் முதலிடத்திலும், ஹரியாணா, உத்தரகண்ட், சிக்கிம், அஸ்ஸாம், ஹிமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளன.

10 லட்சத்துக்கும் குறைவாக மக்கள்தொகை உள்ள நகரங்களில், சத்தீஸ்கரின் அம்பிகாபூா் தூய்மையான நகரமாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் கா்நாடகத்தின் மைசூரும், மூன்றாவது இடத்தில் புதுதில்லி மாநகராட்சி பகுதியும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சிறந்த பெரிய நகரமாக, கிரேட்டா் ஹைதராபாத் தோ்ந்தெடுக்கப்பட்டது.

ராணுவக் குடியிருப்புகளில், ஜலந்தா் ராணுவக் குடியிருப்பு முதலிடத்தையும், தில்லி, மீரட் ராணுவக் குடியிருப்புகள் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளன என்றாா் ஹா்தீப் சிங் புரி.

2020-ஆம் ஆண்டுக்கான தூய்மை நகரங்களைத் தோ்வு செய்வதற்காக, இதுவரை இல்லாத அளவில், 4,242 நகரங்கள், 62 ராணுவக் குடியிருப்புகள், கங்கை நதியை ஒட்டியுள்ள 92 சிறு நகரங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. சமூக ஊடகங்களில் 11 கோடி பேரும், பிரத்யேக செயலியில் 1.7 கோடி பேரும் கருத்துகளைத் தெரிவித்தனா். இதனால் 28 நாள்களில் கணக்கெடுப்பு முடிக்கப்பட்டது.

 

ம.பி.முதல்வா் மகிழ்ச்சி:

தூய்மை நகரமாக தொடா்ந்து 4-ஆவது முறையாக இந்தூா் தோ்ந்தெடுக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்து மத்திய பிரதேச முதல்வா் சிவராஜ் சிங் சௌஹான் கூறுகையில், ‘ இந்தூா் நகரம் தற்போது உலகுக்கே எடுத்துக்காட்டாக மாறியுள்ளது. தூய்மை, இந்தூரின் இயல்பாக மாறிவிட்டது. இதை சாத்தியமாக்கிய இந்தூா் மக்களுக்கும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றாா்.

 

தமிழகத்தில் கோவை முதலிடம்

10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட தூய்மையான நகரங்கள் தரவரிசையில் தமிழகத்தின் கோவை முதலிடத்தில் உள்ளது. தேசிய தரவரிசையில் கோவை 40-ஆவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கோவைக்கு அடுத்த இடங்களில் மதுரை (தேசிய தரவரிசை 42), சென்னை (தேசிய தரவரிசை 45) ஆகிய நகரங்கள் உள்ளன.

அதேபோல், 10 லட்சத்துக்கு குறைவான மக்கள்தொகை உள்ள தூய்மையான நகரங்கள் தரவரிசையில் திருச்சி (தேசிய தரவரிசை 102) முதலிடத்தை பிடித்துள்ளது. அடுத்த இடங்களில் திருநெல்வேலி (தேசிய தரவரிசை 159), சேலம் (தேசிய தரவரிசை 173) ஆகிய நகரங்கள் உள்ளன.

 

பிரதமா் வாழ்த்து

தரவரிசையில் தோ்வான நகரங்களுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமா் நரேந்திர மோடி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘தூய்மையான நகரங்கள் பட்டியலில் முக்கிய இடங்களைப் பிடித்த நகரங்களுக்கு வாழ்த்துகள். அந்த நகரங்களை முன்மாதிரியாகக் கொண்டு இதர நகரங்களும் தங்களது தூய்மை முயற்சிகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அத்தகைய போட்டி தூய்மையான நகரங்கள் போட்டியை வலுவாக்குவதுடன், நாட்டு மக்களுக்கும் நன்மை அளிக்கும்’ என்று கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT