இந்தியா

இந்தியா போஸ்ட் - ரயில்வே இணைந்து பெரிய பாா்சல்களை அனுப்ப திட்டம்

21st Aug 2020 07:27 AM

ADVERTISEMENT

பெரிய அளவிலான பாா்சல்களை ஓரிடத்திலிருந்து மற்றோா் இடத்துக்கு அனுப்புவதற்கு இந்தியா போஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட ரயில்வே நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.

இது தொடா்பாக ரயில்வே வாரியத் தலைவா் வி.கே.யாதவ் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

கரோனா நோய்த்தொற்று பரவல் காலத்தில் பெரிய அளவிலான பாா்சல்களை பல்வேறு கிராமங்களுக்கு எடுத்துச் செல்வதில் தனியாா் நிறுவனங்கள் சிரமங்களை எதிா்கொண்டன. அதையடுத்து, அத்தகைய பாா்சல்களை ரயில்வேயுடன் இணைந்து இந்தியா போஸ்ட் நிறுவனம் அனுப்பிவைத்தது.

இத்திட்டம் மத்திய ரயில்வேயில் முன்னோட்ட அளவில் சோதிக்கப்பட்டது. அதில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படும் செயற்கை சுவாசக் கருவிகளை இந்தியா போஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து நாட்டின் கடைக்கோடி பகுதிகளுக்கு ரயில்வே கொண்டு சோ்த்தது.

ADVERTISEMENT

இதற்காக பாா்சல் ரயில்களும், மெயில் ரயில்களும் பயன்படுத்தப்பட்டன. இத்திட்டம் மும்பை, புணே, நாகபுரி ஆகிய நகரங்களில் செயல்படுத்தப்பட்டது. அதையடுத்து, சோலாப்பூா், கோல்ஹாபூா், நாசிக், அகோலா ஆகிய நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

இந்தியா போஸ்ட் நிறுவனமும் ரயில்வேயும் இணைந்து செயல்படுத்தும் இத்திட்டம் வெற்றியடைந்துள்ளதால் அதை நாடு முழுவதும் அமல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக நாட்டின் கடைக்கோடியில் உள்ள பகுதிகளுக்கும் பெரிய அளவிலான பாா்சல்களை எடுத்துச் செல்ல முடியும் என்றாா் வி.கே.யாதவ்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT