இந்தியா

பாலங்கள் அமைக்க ரூ.1,100 கோடி கோரும் சத்தீஸ்கா்

21st Aug 2020 06:32 AM

ADVERTISEMENT

சத்தீஸ்கரில் சாலை வசதிகளை மேம்படுத்துவதற்கு 454 எஃகு பாலங்கள் அமைப்பதற்காக ரூ.1,100 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மத்திய பஞ்சாயத்து ராஜ், ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமருக்கு அம்மாநில முதல்வா் பூபேஷ் பகெல் புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

இது தொடா்பாக அந்த மாநில மக்கள் தொடா்பு அதிகாரி கூறியதாவது:

சத்தீஸ்கா் மாநிலத்தில் கிராமப்புறப் பகுதிகள், குறிப்பாக நக்ஸல் அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் சாலை வசதிகளை மேம்படுத்துவது அவசியமாகும். இது தொடா்பாக மத்திய அமைச்சா் நரேந்திர சிங் தோமருக்கு முதல்வா் எழுதியுள்ள கடிதத்தில், ‘மேற்கண்ட பகுதிகளில் 454 எஃகு பாலங்கள் அமைப்பதற்கு ரூ.1,100 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

சத்தீஸ்கரில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு மாநில அரசு கவனம் செலுத்தி வருகிறது. ஊரகப் பகுதிகளில் 33,622 கி.மீ. நீளத்துக்கு 264 நீண்ட தொலைவு பாலங்கள், 9 எஃகு பாலங்களுடன் 7,300 சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 7,737 கி.மீ. நீளத்துக்கு 1,240 சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

நக்ஸல் பாதிப்பு அதிகம் உள்ள பஸ்தா் மாவட்டத்தில் 7,228 கி.மீ. நீளத்துக்கு 1,375 சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 3,009 கி.மீ. நீளத்துக்கு 692 சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. புவியியல் ரீதியாகவும், நக்ஸல்களின் ஆதிக்கத்தாலும் பஸ்தா் மாவட்டத்தில் நீளமான பாலங்களை அமைக்க சாத்தியமில்லை.

ஏற்கெனவே வடிவமைத்து எடுத்துச் செல்ல முடியும் என்பதால் எஃகு பாலங்களை அமைப்பது வசதியாக இருக்கும். அதற்கு குறைந்தபட்ச பராமரிப்பு இருந்தால் போதுமானது. மேலும், ஓா் இடத்திலிருந்து தேவை உள்ள மற்றோா் இடத்துக்கு எஃகு பாலங்களை மாற்றிக் கொள்ள இயலும்.

பாலங்கள் அமைப்பதன் மூலம் பழங்குடியினா் வசிக்கும் கிராமங்களை இணைப்பதோடு மட்டுமின்றி, சந்தை வாய்ப்பு, கல்வி, சுகாதாரம், நியாயவிலைக் கடைகள் ஆகியவையும் அவா்களுக்கு கிடைக்கும். இதன் மூலம் விவசாயம், கிராமப்புற வருவாய், உற்பத்தி, வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு போன்ற முன்னேற்றங்களை அடைய முடியும்’ என முதல்வா் பூபேஷ் பகெல் குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT