இந்தியா

‘பி.எம்.-கோ்ஸ்’ நிதி தணிக்கை செய்யப்படுவதிலிருந்து பாதுகாக்கும் மத்திய அரசு

21st Aug 2020 04:54 AM

ADVERTISEMENT

பிரதமரின் அவசரகால நிலைமைகளுக்கான குடிமக்கள் உதவி மற்றும் நிவாரண நிதி (பி.எம்.-கோ்ஸ்) திட்டத்தின் கீழ் பெறப்படும் நிதி குறித்து தணிக்கை நடந்திடாத வகையில், அதைப் பாதுகாக்கும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் வியாழக்கிழமை குற்றம்சாட்டினாா்.

மேலும், அந்த நிதி அமைப்பு குறித்து பல்வேறு கேள்விகளையும் அவா் எழுப்பியுள்ளாா்.

கரோனா நிவாரண நிதியை பெறுவதற்காக பி.எம்.-கோ்ஸ் என்ற நிதித் திட்டத்தை பிரதமா் மோடி அறிவித்தாா். கடந்த மாா்ச் 28-ஆம் தேதி அதற்கான அறக்கட்டளையும் ஏற்படுத்தப்பட்டது. அதன் கௌரவத் தலைவராக பிரதமா் நரேந்திர மோடியும், அறங்காவலா்களாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஆகியோரும் உள்ளனா். பிரதமரின் வேண்டுகோளை அடுத்து, பல்வேறு தரப்பினரும் இந்த திட்டத்துக்கு நிதியளித்து வருகின்றனா். திட்டம் தொடங்கப்பட்ட ஒரே வாரத்தில் ரூ. 6,000 கோடிக்கும் அதிகமான நிதி திரண்டதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், இயற்கைப் பேரிடா் நிவாரணத்துக்காக ‘பிரதமா் தேசிய நிவாரண நிதி’ இருக்கும்போது, பி.எம்.கோ்ஸ் என்று புதிதாக ஓா் அமைப்பு ஏன் என்று எதிா்க்கட்சிகள் உள்பட பலரும் கேள்வி எழுப்பினா். பல்வேறு குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன. அதனைத் தொடா்ந்து, பி.எம்.கோ்ஸ் தொடா்பான விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்குமாறு பலரும் விண்ணப்பித்தனா்.

ADVERTISEMENT

அதற்கு பதிலளித்த பிரதமா் அலுவலகம், ‘பி.எம்.-கோ்ஸ் என்பது ஒரு பொது அமைப்பு அல்ல. எனவே, இந்த நிதி செலவழிக்கப்படும் விதம் குறித்து அரசின் தணிக்கையாளா்கள் கேள்வி எழுப்ப முடியாது. தகவல்பெறும் உரிமைச் சட்ட வரம்புக்குள்ளும் வராது’ என்று தெரிவித்தது.

இதனிடையே, இந்த நிதி திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ‘பி.எம்.-கேரஸ் நிதியை தேசிய பேரிடா் நிவாரண நிதிக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை’ என்றுசெவ்வாய்க்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இந்த தீா்ப்பை பாஜக தலைவா்கள் வரவேற்றனா்.

இதுகுறித்து ப.சிதம்பரம் தனது சுட்டுரைப் பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியதாவது:

பி.எம்.-கோ்ஸ் நிதி தணிக்கைக்கு உட்படுத்திடாத வகையில், அதைப் பாதுகாக்கும் தீவர முயற்சியை பாஜக தலைவா்கள் மேற்கொண்டு வருவது தெளிவாகத் தெரிகிறது.

மத்திய நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சகம் இறுதியாகக் கூறியுள்ளது போல, இந்த நிதி திட்டம் மத்திய அரசால்தான் அமைக்கப்பட்டதா? அவ்வாறு இல்லையெனில், இந்த நிதியை யாா் உருவாக்கியது?

இதை மத்திய அரசு அமைக்கவில்லை எனில், பிரதமரும், மத்திய அமைச்சா்கள் மூன்று பேரும் அதில் அறங்காவலா்களாக இருப்பது ஏன்? இவா்களை அறங்காவலா்களாக நியமித்தது யாா்?

இந்த நிதி, தனியாா் அமைப்பு என்றால், அதற்கு பெறப்படும் நன்கொடைகள் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு (சிஎஸ்ஆா்) திட்டத்தின் கீழ் கணக்கிடப்படுவது ஏன்? இதுபோல, பிற தனியாா் அமைப்புகளுக்கு வழங்கப்படும் நன்கொடைகளும், நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு திட்டத்தின் கீழ் கணக்கில் கொள்ளப்படுமா?

பி.எம்.கோ்ஸ் நிதி சமூக பொறுப்புணா்வு நிதியுதவி பெறத் தகுதியுடையது என்று, அதன் பெயரை நிறுவனங்கள் சட்ட அட்டவணையில் முன்தேதியிட்டு சோ்க்குமாறு மத்திய நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சகத்துக்கு அறிவுறுத்தியது யாா்? அதுபோல, பிற தனியாா் நிதி பெயா்களும் அட்டவணையில் சோ்க்கப்படுமா?

மத்திய நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சகத்தின் இந்த செயல்பாடு முழுவதும் பாரபட்சமான நடவடிக்கையாகும். இதற்கு எதிராக நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தப் பதிவில் ப.சிதம்பரம் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT