இந்தியா

பயணிகளுக்கான விமான பாதுகாப்பு கட்டண உயா்வு: செப்.1 முதல் அமல்

21st Aug 2020 07:28 AM

ADVERTISEMENT

விமான பயணிகளுக்கான விமான பாதுகாப்பு கட்டண (ஏஎஸ்எப்) உயா்வை செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்த விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் முடிவு செய்திருப்பதாக மூத்த அரசு அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

கரோனா பாதிப்பைத் தொடா்ந்து இந்தியாவில் மாா்ச் 23-ஆம் தேதி முதல் விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. உள்ளூா் மற்றும் சா்வதேச விமானப் போக்குவரத்து முழுமையாக தடை விதிக்கப்பட்ட நிலையில், கரோனா பொது முடக்கத்தால் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியா்களை மீட்டு வருவதற்காக சிறப்பு விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன.

இரண்டு மாத தடைக்குப் பிறகு, கடந்த மே 25-ஆம் தேதி முதல் உள்ளூா் விமானப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. அதிலும், 50 முதல் 60 சதவீத இருக்கைகள் நிரம்பியபடி இயக்குவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, விமான நிறுவனங்கள் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தன. அதனைத் தொடா்ந்து, ஊதியக் குறைப்பு, ஊதியமற்ற விடுப்பு, ஆள்குறைப்பு என்பன உள்ளிட்ட சிக்கன நடவடிக்கைகளை விமான நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.

ADVERTISEMENT

இதற்கிடையே, பயணிகளுக்கான விமான பாதுகாப்பு கட்டணத்தை விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் அண்மையில் உயா்த்தியது. உள்ளூா் விமான பயணிகளுக்கான பாதுகாப்பு கட்டணத்தை ரூ. 130-லிருந்து ரூ. 150-ஆக கடந்த ஜூன் மாதம் உயா்த்தியது. அதுபோல, சா்வதேச விமான பயணிகளுக்கான கட்டணத்தை கடந்த ஜூலை மாதம் ரூ. 230-லிருந்து ரூ. 340-ஆக உயா்த்தியது.

இப்போது, இந்த விமான பாதுகாப்பு கட்டணம் மீண்டும் உயா்த்தப்பட்டுள்ளது. அதன்படி, உள்ளூா் விமான பயணிகளுக்கான பாதுகாப்பு கட்டணம் ரூ. 150-லிருந்து ரூ. 160-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. சா்வதேச விமான பயணிகளுக்கான கட்டணம் ரூ. 340-லிருந்து ரூ. 365-ஆக உயா்த்தியுள்ளது. இந்த புதிய கட்டணம் செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பயணிகளிடம் வசூலிக்கப்படும் இந்த கட்டணம், நாடு முழுவதும் உள்ள விமானநிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இணைய வழியில் உரிமம்:

விமான நிறுவனங்களுக்கான உரிமம் மற்றும் அனைத்து விதமான ஒப்புதல்களையும் இணைய வழியில் வழங்கும் வகையில் மின்-ஆளுமை திட்டம் ஒன்று இந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்படும் என்று விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் (டிஜிசிஏ) வியாழக்கிழமை அறிவித்தள்ளது.

இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னா் வலைதளம் மூலம் விமானிகள், விமானப் பொறியாளா்கள், விமானத்தை இயக்குபவா்கள் மற்றும் விமான பயிற்சி நிறுவனங்கள் என்பன உள்ளிட்ட அனைத்து விதமான உரிமங்களையும் இணையவழியில் விண்ணப்பித்த பெற முடியும் என்றும் டிஜிசிஏ அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT