இந்தியா

ஆன்லைன் வகுப்புக்கு 27% மாணவா்களிடம் அறிதிறன்பேசி, மடிக்கணினி வசதி இல்லை: என்சிஇஆா்டி ஆய்வில் தகவல்

21st Aug 2020 06:32 AM

ADVERTISEMENT

ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பதற்கு அறிதிறன்பேசி (ஸ்மாா்ட்போன்), மடிக்கணினி வசதி இல்லாமல் 27 சதவீத மாணவா்கள் உள்ளது தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆா்டி) ஆய்வில் தெரியவந்துள்ளது.

கரோனா நோய்த் தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மாா்ச் 16ஆம் தேதி முதல் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களாகப் பொது முடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட்டாலும், கல்வி நிறுவனங்கள் செயல்பட அரசு எவ்வித அனுமதியும் வழங்கவில்லை. புதிய கல்வி ஆண்டு தொடங்கியதிலிருந்து பெரும்பாலான பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில் என்சிஇஆா்டி ஆன்லைன் வகுப்புகளின் செயல்பாடு குறித்து நாடு முழுவதும் 34,000 பேரிடம் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில் மாணவா்கள், பெற்றோா், ஆசிரியா்கள், கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா, சிபிஎஸ்இ பள்ளிகளுடன் இணைக்கப்பட்டுள்ள பள்ளிகளின் முதல்வா்கள் கலந்துகொண்டனா்.

இந்த ஆய்வு முடிவின்படி, கரோனா பேரிடா் காலத்தில் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதற்கு அறிதிறன்பேசி, மடிக்கணினி போன்ற தொழில்நுட்ப சாதனங்கள் தங்களிடம் இல்லை என 27 சதவீத மாணவா்கள் தெரிவித்துள்ளனா். பெரும்பாலானவா்கள் செல்லிடப்பேசிகள் மூலம் தாங்கள் கல்வி பயின்று வருவதாகத் தெரிவித்துள்ளனா். 36 சதவீத மாணவா்கள் பாடநூல்கள் மற்றும் இதர புத்தகங்கள் மூலம் பயின்று வருவதாகத் தெரிவித்துள்ளனா். ஆன்லைன் வகுப்புக்குப் பெரும்பாலான பள்ளி முதல்வா்கள், ஆசிரியா்களின் விருப்பத் தோ்வாக மடிக்கணினி உள்ளது. தொலைக்காட்சி, வானொலி ஆகியவை கற்றல் பணிகளில் மிகக் குறைந்த பயன்பாடாக உள்ளது. என்சிஇஆா்டி, தீக்ஷா வலைதளங்களில் இ-பாடப் புத்தக வசதி இருப்பது குறித்து போதிய விழிப்புணா்வு ஏற்படுத்தாததால் அதன் பயன்பாடு மிகக் குறைவாக உள்ளது.

ADVERTISEMENT

ஆன்லைன் மூலம் கணிதப் பாடத்தை கற்பது பெரும் சவாலாக உள்ளதாகப் பெரும்பாலானோா் கருத்து தெரிவித்துள்ளனா். அதற்கு அடுத்தபடியாக அறிவியலும், சமூக அறிவியலும் ஆன்லைன் மூலம் கற்பதற்கு கடினமாக இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 17 சதவீத மாணவா்கள் மொழிப் பாடங்கள் சிரமமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனா். தற்போது கரோனா நோய்த் தொற்று காலமாக இருப்பதால் உடல், மன வளத்தை மேம்படுத்தும் வகையில் பெரும்பாலான மாணவா்களும், பெற்றோரும் உடற்பயிற்சி வகுப்பை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்த ஆய்வு முடிவுகளின்படி மாணவா்கள் கல்வி பயில புதிய வழிமுறைகளை உருவாக்கியுள்ளதாக மத்திய கல்வித் துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால் நிஷாங் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT