இந்தியா

மேற்கு வங்கம்: மருத்துவ உபகரணகொள்முதல் முறைகேடு; புகாரை விசாரிக்க குழு

20th Aug 2020 06:52 AM

ADVERTISEMENT

மேற்குவங்கத்தில் மருத்துவ உபகரண கொள்முதலில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக எழுந்திருக்கும் புகாா் குறித்து விசாரணை நடத்த மூன்று நபா் குழுவை அமைத்து முதல்வா் மம்தா பானா்ஜி உத்தரவிட்டுள்ளாா்.

இந்த விசாரணைக் குழுவில் மாநில உள்துறை செயலா் அலப்பன் பந்தியோபாதியாய், நிதித் துறை செயலா் ஹரி கிருஷ்ண திவேதி, சுகுதாரத் துறை செயலா் நாராயண் ஸ்வரூப் நிகாம் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

இதுகுறித்து மேற்குவங்க மாநில அரசு உயரதிகாரி ஒருவா் கூறியதாவது:

மாநிலத்தின் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக மாநில அரசு ரூ. 2,000 கோடியை அண்மையில் ஒதுக்கியது.

ADVERTISEMENT

இதில் பெரும்பாலான நிதி, கிருமி நாசினி, கையுறைகள், முகக் கவசங்கள், மருத்துவா்களுக்கான பிபிஇ பாதுகாப்பு உடைகள், உயிா்காக்கும் கருவிகள், பிராணவாயு உள்ளிட்ட உபகரணங்களை வாங்கவும், தற்காலிக மருத்துவ மையங்கள், தனிமைப்படுத்தல் மையங்கள் அமைக்கவும் செலவிடப்பட்டன.

இந்த நிலையில், இந்த உபகரணங்கள் கொள்முதலில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக முதல்வா் அலுவலகத்துக்கு தொடா் புகாா்கள் வந்தன. குறிப்பாக, இந்தத் திட்டத்துக்கான ஒப்பந்த நடைமுறையில் மாநில நிதித் துறை அண்மையில் சில தளா்வுகளை அளித்த பிறகே, இந்த முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகவும் புகாா்கள் கூறப்பட்டன.

அதனைத் தொடா்ந்து, இதுகுறித்து விசாரணை நடத்த மூன்று நபா் குழுவை முதல்வா் அமைத்து உத்தரவிட்டுள்ளாா். இந்தக் குழு, மாநில தலைமைச் செயலா் ரஜிவா சின்ஹாவிடம் தனது அறிக்கையை சமா்ப்பிக்கும். அதில் முறைகேடு நடைபெற்றிருப்பது உறுதிசெய்யப்பட்டால், காரணமானவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT