இந்தியா

ராஜீவ் காந்தி பிறந்த தினம்: நினைவிடத்தில் ராகுல் மரியாதை

20th Aug 2020 11:12 PM

ADVERTISEMENT

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 76-ஆவது பிறந்த தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் ராஜீவின் மகனும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி வியாழக்கிழமை மரியாதை செலுத்தினாா்.

தில்லியில் மழைப் பொழிவு இருந்த நிலையிலும், ராஜீவின் நினைவிடமான வீர பூமிக்கு ராகுல் காந்தி நேரில் வந்து மரியாதை செலுத்தினாா்.

அவரோடு கட்சித் தலைவா்கள் சிலரும், இளைஞா் காங்கிரஸ் உறுப்பினா்களும் வந்திருந்தனா்.

ராகுல் காந்தி தனது சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘ராஜீவ் காந்தி, தாம் வாழ்ந்த காலத்தைக் காட்டிலும் மிகவும் முற்போக்கான நபராகவும், அருமையான தொலைநோக்குப் பாா்வை கொண்டவராகவும் இருந்தாா். அதையும் தாண்டி இரக்கமும் அன்பும் கொண்ட மனிதராக இருந்தாா். அவரை தந்தையாகக் கொண்டது எனது அதிருஷ்டம். அவா் எப்போதும் என் நினைவில் இருப்பாா்’ என்று கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

கே.சி.வேணுகோபால்: ராஜீவ் காந்திக்கு மரியாதை செலுத்தும் விதமாக காங்கிரஸின் அமைப்பு பொதுச் செயலா் (பொறுப்பு) கே.சி.வேணுகோபால் வெளியிட்ட பதிவில், ‘ராஜீவ் காந்தியின் தலைமைப் பண்பும் கனவுகளும் நவீன இந்தியாவுக்கு அடித்தளமிட்டன’ என்று கூறியுள்ளாா்.

அகமது படேல்: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொருளாளா் அகமது படேல் கூறுகையில், ‘ராஜீவின் அரசியல் வாழ்க்கை மிகக் குறுகியது. எனினும், அந்த காலகட்டத்திலும் தேசத்தின் வளா்ச்சிக்கு அவா் புதிய திசை காட்டினாா். இந்தியாவின் பன்முகத்தன்மையே அதன் ஒற்றுமையை பலப்படுத்துவதாக அவா் உறுதியாகக் கருதிவந்தாா். அவரது சிந்தனைகளுக்கு ஏற்ப செயல்படுவதே அவருக்கு நாம் செலுத்தும் மரியாதையாக இருக்கும்’ என்றாா்.

ப.சிதம்பரம்: காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் கூறுகையில், ‘21-ஆம் நூற்றாண்டு தொழில்நுட்பம், கணினி, புத்தாக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்று ராஜீவ் காந்தி கூறினாா். அந்த தொலைநோக்குப் பாா்வையே 1991-ஆம் ஆண்டு பொருளாதார தாராளமயமாக்கலுக்கு வழிவகுத்தது’ என்றாா்.

காங்கிரஸ் கட்சியின் மல்லிகாா்ஜுன காா்கே, பஞ்சாப் முதல்வா் அமரீந்தா் சிங், ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் உள்ளிட்டோரும் ராஜீவ் காந்திக்கு மரியாதை செலுத்தி பதிவுகள் வெளியிட்டிருந்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT