மும்பை: மகாராஷ்டிரத்தில் கரோனா ஊரடங்கால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பொதுபோக்குவரத்து பேருந்து சேவை 5 மாதங்களுக்கு பிறகு இன்று (வியாழக் கிழமை) துவங்கியது.
மகாராஷ்டிர சாலை போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் மாதம் பொதுபோக்குவரத்து சேவை தற்காலிகமாக முடக்கப்பட்டது. இதனிடையே தற்போது கரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில், மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து சேவை இன்று முதல் துவக்கப்பட்டுள்ளது.
மும்பை பணிமனையில் இருந்து ரத்னகிரி மாவட்டத்திற்கு இன்று காலை 8.30 மணியளவில் 6 பயணிகளுடன் முதல் பேருந்து இயக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து சேவை படிப்படியாக துவக்கப்பட்டுள்ளது.
மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க பயணிகள் கட்டாயம் இ-பாஸ் வைத்திருக்க வேண்டும். முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
வெளிமாநில தொழிலாளர்களை அழைத்துச் செல்ல அனுமதிக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள், விநாயகர் சதுர்த்தியையொட்டி மீண்டும் இயக்கப்படுகிறது.
இதுவரை மொத்தமாக ஒரு லட்சம் பயணிகளுடன் 18,000 பேருந்துகள் இயக்கப்படுகிறது இவ்வாறு மகாராஷ்டிர சாலை போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.