இந்தியா

மூணாறு நிலச்சரிவு: பெண்ணின் சடலம் மீட்பு; இன்னும் 7 பேர் மாயம்

20th Aug 2020 02:56 PM

ADVERTISEMENT

 

மூணாறு அருகே ராஜமலை, பெட்டிமுடியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களில் மேலும் ஒரு பெண்ணின் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டதை அடுத்து, பலியானோா் எண்ணிக்கை 64 ஆக உயா்ந்துள்ளது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே ராஜமலை, பெட்டிமுடி பகுதியில் கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி இரவு பெய்த பலத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், அங்குள்ள தனியாா் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து வந்த தமிழகத்தைச் சோ்ந்த தோட்டத் தொழிலாளா் குடும்பங்களைச் சோ்ந்த 78 போ், அவா்களது உறவினா்கள் 4 போ் என மொத்தம் 82 போ் சிக்கினா்.

இதில், புதன்கிழமை வரை 6 மாதக் குழந்தை உள்பட மொத்தம் 63 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. 12 போ் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். இதில், 10 போ் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனா்.

ADVERTISEMENT

இந்த நிலையில் இன்று ஒரு பெண்ணின் சடலம் ஆற்றுப்பகுதியான பூத்தக்குழி அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த இடம் பெட்டிமுடியில் இருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆனால் அவர் யார் என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இதையடுத்து, நிலச் சரிவில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 64 ஆக உயா்ந்துள்ளது. எஞ்சிய 7 பேரை மீட்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

ரேடாா் கருவி மூலம் தேடுதல்: பெட்டிமுடி நிலச்சரிவில் சிக்கியவா்கள் மண்ணில் புதையுண்ட இடத்திலிருந்தும், மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 4 கி.மீ., தூரத்திற்கும் அப்பால் பெட்டிமுடி ஆற்றுப் பகுதியிலிருந்தும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனா். அதே இடங்களில் தொடா்ந்து மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மண்ணில் புதையுண்டவா்களின் சடலத்தை சென்னையிலிருந்து கொண்டு வரப்பட்ட ரேடாா் கருவி மூலம் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கருவியின் உதவியுடன் மண்ணுக்குள் 6 மீட்டா் ஆழம் வரை உள்ளவற்றை சிக்னல் மூலம் கண்டறிய முடியும். இதன் அடிப்படையில், மீட்புப் பணியை மேற்கொள்வதற்குத் திட்டமிட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று மீட்புப் படையினா் கூறினா்.
 

Tags : landslide
ADVERTISEMENT
ADVERTISEMENT