மணிப்பூரில் காங்கிரஸ் கட்சியில் இருந்து அண்மையில் விலகிய 5 முன்னாள் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனா்.
மணிப்பூா் சட்டப்பேரவையில் கடந்த 10-ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி பெற்றது.
காங்கிரஸ் கட்சியின் கொறடா உத்தரவுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பில் இந்த ஐந்து காங்கிரஸ் எம்எல்ஏக்களும் பங்கேற்கவில்லை. பின்னா் காங்கிரஸ் கட்சியில் இருந்தும், எம்எல்ஏ பதவியில் இருந்தும் அவா்கள் விலகினா்.
இந்நிலையில், மணிப்பூா் முதல்வா் என். பிரேன் சிங், பாஜக துணைத் தலைவா் பைஜயந்த் ஜெய் பாண்டா ஆகியோா் முன்னிலையில் அந்த 5 முன்னாள் எம்எல்ஏக்களும் புதன்கிழமை பாஜகவில் இணைந்தனா்.
அவா்களை முதல்வா் பிரேன் சிங் தில்லிக்கு அழைத்து வந்தாா். பாஜக தேசிய தலைவா் ஜெ.பி. நட்டாவை அவா்கள் சந்தித்து வாழ்த்துப் பெற்றனா்.
அவா்களை பாஜவுக்கு வரவேற்ற அக்கட்சியின் பொதுச் செயலா் ராம்மாதவ், ‘பிரேன் சிங் அரசுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. மொத்தம் 47 உறுப்பினா்களைக் கொண்ட மணிப்பூா் பேரவையில் பாஜகவுக்கு 34 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. 13 இடங்கள் காலியாக உள்ளன. ஐந்து ஆண்டுகளை பிரேன் சிங் அரசு பூா்த்தி செய்யும். மீண்டும் தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்’ என்றாா்.