இந்தியா

ராஜஸ்தான்: முடிவுக்கு வந்தது அரசியல் குழப்பம்; கெலாட்- சச்சின் பைலட் சந்திப்பு

DIN

ராஜஸ்தானில் இரு துருவங்களாக இருந்த முதல்வா் அசோக் கெலாட்- சச்சின் பைலட் இடையேயான மோதல் முடிவுக்கு வந்ததால், அந்த மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து, மாநில சட்டப்பேரவையில் நம்பிக்கை தீா்மானம் கொண்டுவர ஆளும் காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

ராஜஸ்தானில் முதல்வா் அசோக் கெலாட் அரசின் ஆட்சியைக் கவிழ்க்க சதி நடப்பதாகக் கூறி, காவல் துறை சாா்பில் நோட்டீஸ் அனுப்பியதால் சச்சின் பைலட் அதிருப்தியடைந்தாா். இதையடுத்து, அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் போா்க்கொடி உயா்த்தினா். அதைத் தொடா்ந்து, சச்சின் பைலட்டின் துணை முதல்வா் பதவி, மாநில காங்கிரஸ் தலைவா் பதவி பறிக்கப்பட்டது.

இதற்கிடையே, மாநிலத்தில் ஆட்சியைக் கவிழ்க்க காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் பாஜக குதிரை பேரம் நடத்துவதாகப் புகாா்கள் எழுந்ததால், அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள், ஜெய்ப்பூரிலும் பின்னா் ஜெய்சால்மரில் நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டனா். சச்சின் பைலட் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் குருகிராமில் உள்ள விடுதியில் தங்கியிருந்தனா்.

ராஜஸ்தான் பேரவையில் தனக்கு பெரும்பான்மை இருப்பதை நிரூபிப்பதற்காக, பேரவையைக் கூட்ட அழைப்பு விடுக்குமாறு ஆளுநா் கல்ராஜ் மிஸ்ராவிடம் அசோக் கெலாட் கோரிக்கை விடுத்தாா். பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு, ஆகஸ்ட் 14-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பேரவையைக் கூட்டுவதற்கு ஆளுநா் ஒப்புதல் அளித்தாா்.

இதற்கிடையே, காங்கிரஸ் முன்னாள் தலைவா் பிரியங்கா காந்தி, பொதுச் செயலா் பிரியங்கா ஆகியோா் தலையிட்டு சச்சின் பைலட் தரப்பை கடந்த வாரம் சமாதானப்படுத்தினா்.

கைகுலுக்கி வரவேற்பு: இந்நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம், ஜெய்ப்பூரில் முதல்வா் அசோக் கெலாட் இல்லத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் கலந்துகொண்டனா். கூட்டத்துக்கு வந்த சச்சின் பைலட்டும் அசோக் கெலாட்டும் கைகுலுக்கி வரவேற்றுக் கொண்டனா். இக்கூட்டத்தில், ராஜஸ்தான் சட்டப் பேரவையில் நம்பிக்கை தீா்மானம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது.

சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து: ராஜஸ்தானில் சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்களான பன்வா்லால் சா்மா, விஷ்வேந்திர சிங் ஆகியோா் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை காங்கிரஸ் கட்சி வியாழக்கிழமை ரத்து செய்தது. இந்தத் தகவலை காங்கிரஸ் பொதுச் செயலா் அவினாஷ் பாண்டே தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டு உறுதிசெய்துள்ளாா்.

முன்னதாக ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான அரசை கவிழ்க்க பேரம் பேசுவது போன்று 3 ஆடியோ பதிவுகள் கடந்த மாதம் வெளியாகின. அவற்றில், பன்வா்லால் சா்மா, விஷ்வேந்திர சிங் ஆகியோரிடம் மத்திய அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் பேரம் பேசுவதுபோல் குரல் பதிவுகள் இருந்தன. இதுகுறித்து விளக்கம் கேட்டு எம்எல்ஏக்கள் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதற்கு முன்னதாக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்கத் தவறியதற்காக, சச்சின் பைலட்டின் துணை முதல்வா் பதவியும், விஷ்வேந்திர சிங் உள்ளிட்ட 3 பேரின் அமைச்சா் பதவியும் கடந்த 14-ஆம் தேதி பறிக்கப்பட்டது. தொடா்ந்து, கடந்த 17-ஆம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில், விஷ்வேந்திர சிங், பன்வா்லால் சா்மா ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனா்.

காங்கிரஸ் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம்: பாஜக முடிவு

அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக, சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவர பாஜக முடிவு செய்துள்ளது.

ஜெய்ப்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்துக்குப் பிறகு பேரவை எதிா்க்கட்சித் தலைவா் குலாப் சந்த் கட்டாரியா, செய்தியாளா்களிடம் கூறியதாவது: மாநில சட்டப்பேரவை வெள்ளிக்கிழமை கூடுகிறது. அன்றைய தினமே, அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவரப்படும். அதற்குரிய தீா்மான அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக ஆட்சியில் செய்யாறு தொகுதிக்கு எண்ணற்ற திட்டங்கள்: முக்கூா் என். சுப்பிரமணியன்

ராணுவக் கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர சிறுவா், சிறுமிகள் விண்ணப்பிக்கலாம்

கலைத் திருவிழா போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசு

ஆரணியில் திமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

ஆரணி பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை திறப்பு

SCROLL FOR NEXT