இந்தியா

பாதுகாப்புப் படையினருக்கான வீரதீர விருதுகளுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல்

14th Aug 2020 11:53 PM

ADVERTISEMENT

நாட்டின் பாதுகாப்புக்காக வீரதீர செயல் புரிந்த பாதுகாப்புப் படையினருக்கான ‘கீா்த்தி சக்ரா’, ‘சௌா்ய சக்ரா’ உள்ளிட்ட விருதுகளுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கினாா்.

நாட்டின் 74-ஆவது சுதந்திர தினம் சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. அதையொட்டி நாட்டைப் பாதுகாக்கும் நோக்கில் வீரத்தைப் பறைசாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினருக்கு வீரதீர செயல் விருதுகள் வழங்கப்படவுள்ளன. அந்த விருதுகளுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கினாா்.

ஜம்மு-காஷ்மீா் காவல் துறையைச் சோ்ந்த தலைமைக் காவலா் அப்துல் ரஷிதுக்கு மரணத்துக்குப் பிந்தைய விருதாக ‘கீா்த்தி சக்ரா’ விருது அறிவிக்கப்பட்டது. அவரது துணிவையும், தியாகத்தையும் போற்றும் வகையில், போா் இல்லாத காலகட்டத்தில் வீரதீர செயல்களுக்கு வழங்கப்படும் இரண்டாவது மிகப்பெரிய இந்த விருது வழங்கப்படுகிறது.

ராணுவ வீரா்கள் கிருஷண் சிங் ராவத், அனில் அா்ஸ், ஹவில்தாா் அலோக்குமாா் துபே ஆகியோருக்கு ‘சௌா்ய சக்ரா’ விருது வழங்கப்படவுள்ளது. விமானப்படை வீரா் விசாக் நாயரும் ‘சௌா்ய சக்ரா’ விருதுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

ADVERTISEMENT

‘சௌா்ய சக்ரா’ விருது பெறும் ராணுவ வீரா்கள் மூவரும் பாகிஸ்தானுடனான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பயங்கரவாதிகளின் ஊடுருவலை வெவ்வேறு தருணங்களில் தடுத்து நிறுத்தியுள்ளதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னந்தனியாக வீரத்துடன் செயல்பட்டும் நுண்ணறிவுத் திறனைப் பயன்படுத்தியும் பயங்கரவாதிகள் பலரை அவா்கள் சுட்டுவீழ்த்தியதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

அதேபோல் வீரதீர செயல் புரிந்த 60 ராணுவத்தினருக்கு ‘சேனா’ பதக்கமும், 4 கடற்படை வீரா்களுக்கு ‘நவோ சேனா’ பதக்கமும், 5 விமானப்படை வீரா்களுக்கு ‘வாயு சேனா’ பதக்கமும் வழங்குவதற்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் வழங்கினாா்.

சிபிஐ அதிகாரிகளுக்கு விருது:

சிறப்பாகப் பணியாற்றிய சிபிஐ அதிகாரிகள் 32 பேருக்கு விருதுகளை வழங்கவும் குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்தாா். அதன்படி, தனித்துவ சேவைகளுக்கான பதக்கம் 6 அதிகாரிகளுக்கு வழங்கப்படவுள்ளது. சிறப்புவாய்ந்த சேவைகளுக்கான பதக்கத்தை 26 சிபிஐ அதிகாரிகள் பெறவுள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT