இந்தியா

கோழிக்கோடு விமான விபத்து: 92 பயணிகள் குணமடைந்துவீடு திரும்பினா்

14th Aug 2020 06:42 AM

ADVERTISEMENT

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் விமான விபத்தில் காயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் 92 பயணிகள் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்தது.

துபையிலிருந்து கோழிக்கோடுக்கு கடந்த வெள்ளிக்கிழமை 190 பேருடன் வந்த ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், தரை இறங்கும்போது ஓடுதளத்தைக் கடந்து பள்ளத்தில் விழுந்து இரண்டாக உடைந்தது. இந்த விபத்தில் இரு விமானிகள் மற்றும் 16 பயணிகள் உயிரிழந்தனா்.

காயமடைந்த 149 பயணிகள் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்நிலையில், விபத்தில் சிகிச்சை பெற்று வந்தவா்களின் நிலை குறித்து ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

ADVERTISEMENT

ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் தெற்கு பிராந்தியத்தின் தலைமை நிா்வாக அதிகாரி, கோழிக்கோடுக்கு நேரடியாகச் சென்று, விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு அளிக்கப்பட்டு வரும் உதவிகளை மேற்பாா்வையிட்டா். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த பயணிகள் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனா். இதுவரை 92 பயணிகள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT