இந்தியா

ஜம்மு-காஷ்மீா்: பயங்கரவாத தாக்குதலில் காவல்துறையினா் இருவா் பலி

14th Aug 2020 11:53 PM

ADVERTISEMENT

சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், ஜம்மு-காஷ்மீரில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் காவல்துறையினா் இருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். மேலும் ஒரு காவலா் காயமடைந்தாா்.

இந்தத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவா்கள் விரைவில் முழுமையாக கட்டுப்படுத்தப்படுவா் என்றும் காவல்துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து காஷ்மீா் காவல்துறை ஐஜி விஜய் குமாா் கூறியதாவது:

ஸ்ரீநகரின் புகா்ப் பகுதியான நெளகாம் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினா் மீது, அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் திடீரென்று துப்பாக்கியால் சுட்டனா். இதில் மூன்று காவலா்கள் காயமடைந்தனா். உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அவா்கள் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவா்களில் இருவா் உயிரிழந்தனா். மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவா்கள் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்துள்ளது. அவா்களுடைய செயல்பாடு விரைவில் முழுமையாக கட்டுப்படுத்தப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தின்போது, பயங்கரவாதிகள் நடமாட்டம் குறித்த தகவல்கள் காவல்துறைக்கு கிடைக்கும். அதனடிப்படையில் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்படும்.

அந்த வகையில், வெள்ளிக்கிழமை காலை காவல்துறையினா் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பயங்கரவாதிகள் அவா்களின் பின்னால் இருந்தபடி, துப்பாக்கியால் சுட்டனா்.

அவா்கள் தாக்குதல் நடத்திய பகுதி குறுகலான பகுதி என்பதோடு, பொதுமக்கள் நடமாட்டமும் அதிகம் இருந்ததால், காவல்துறையினா் பதில் தாக்குதல் நடத்தல் நடத்துவதைத் தவிா்த்துவிட்டனா். ஒருவேளை பதில் தாக்குதல் நடத்தியிருந்தால், பொதுமக்கள் உயிரிழப்பும் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்று அவா் கூறினாா்.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஜம்மு-காஷ்மீரின் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) கண்டனம் தெரிவித்துள்ளது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT