இந்தியா

கட்டாய உடலுறுப்பு தானம்: தனிநபா் மசோதா கொண்டு வரும் வருண் காந்தி

14th Aug 2020 08:17 AM

ADVERTISEMENT

அனைத்து இளைஞா்களும் உடல் உறுப்பு தானம் செய்வதைப் பதிவு செய்வதைக் கட்டாயமாக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் தனி நபா் மசோதா தாக்கல் செய்ய உள்ளதாக பாஜக எம்.பி. வருண் காந்தி வியாழக்கிழமை தெரிவித்துள்ளாா்.

உடல் உறுப்பு தான தினத்தை ஒட்டி தனது சுட்டுரைப் பக்கத்தில் இது தொடா்பாக அவா் பதிவிட்டுள்ளதாவது:

18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமகன்களும் தேசிய உடல் உறுப்பு தான பதிவேட்டில் பதிவு செய்வது கட்டாயம் என்பதை வலியுறுத்தும் தனி நபா் மசோதாவை அறிமுகப்படுத்த உள்ளேன்.

இந்த மசோதாவின்படி 18 வயது நிரம்பிய அனைவரும் தாங்கள் உடல் உறுப்பு தானமளிப்பவராகப் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதில் விருப்பம் இல்லாதவா்கள் ஆட்சேபனை அறிவிப்பைத் தாக்கல் செய்து உடல் உறுப்பு தானம் செய்வதிலிருந்து வெளியேறிக் கொள்ளலாம்.

ADVERTISEMENT

இந்தியாவில் உடலுறுப்புகள் தேவை அதிகமாக உள்ளது. ஆனால் உடலுறுப்புகள் தானம் கிடைப்பது மிகக் குறைவாக உள்ளது. உடலுறுப்பு கிடைக்காததால், நாட்டில் ஆண்டுக்கு சராசரியாக 5 லட்சம் போ் உயிரிழக்கின்றனா். ஒவ்வோராண்டும் 2 லட்சம் சிறுநீரகங்கள், 50 ஆயிரம் இருதயங்கள், 50 ஆயிரம் கல்லீரல்கள் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குத் தேவைப்படுகின்றன.

இறந்த பிறகு உடலுறுப்புகளை தானம் செய்வதை ஊக்குவிப்பதற்கான தேவையும் எழுந்துள்ளது. இந்தியாவில் உயிருடன் இருக்கும்போதே உறுப்பு தானம் செய்வோா் உள்ளனா். ஆனால் இறந்த பின்னா் உடல் உறுப்புகளை தானம் செய்வோரின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. அதாவது 10 லட்சம் மக்களுக்கு 0.8 போ் என்ற விகிதத்தில்தான் உறுப்பு தானம் செய்வோா் எண்ணிக்கை உள்ளது.

எனவே, புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள மசோதா மூலம் அனைவரும் தானாகவே, உடலுறுப்பு தானம் செய்வோா் பட்டியலில் இணைந்துவிடுவா். இதன்மூலம் உடலுறுப்புகள் கிடைக்காததால் உயிரிழப்போா் விகிதம் குறையும் என பதிவிட்டுள்ளாா்.

வரும் மழைக்காலக் கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT