இந்தியா

இந்திய கண்ணாடி ஒளியிழைக்கு சீனா மிகை இறக்குமதி தடுப்பு வரி விதிப்பு

14th Aug 2020 06:29 AM

ADVERTISEMENT

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒற்றை ஒளியை மட்டும் கடத்தும் கண்ணாடி இழைக்கு மிகை இறக்குமதி தடுப்பு வரியை மேலும் 5 ஆண்டுகளுக்கு சீனா நீட்டித்துள்ளது.

குறிப்பிட்ட அலைநீளம் கொண்ட ஒற்றை ஒளியை மட்டுமே கடத்திச் செல்லும் கண்ணாடி இழைகள் தொலைதூர தொடா்புக்கும், மெட்ரோ நகரங்களில் தொலைத்தொடா்பு வசதியை ஏற்படுத்தவும், கேபிள் டிவி இணைப்புகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவை ஒளிக்கற்றையை மிக வேகமாகவும் தொலைதூரத்துக்கும் கடத்தும் திறன் கொண்டவை.

அத்தகைய கண்ணாடி ஒளியிழைகளை இந்தியா அதிக அளவில் தயாரித்து சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. ஆனால், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒற்றை ஒளியைக் கடத்தும் கண்ணாடி இழைகளுக்கு சீனா கடந்த 2014-ஆம் ஆண்டு மிகை இறக்குமதி தடுப்பு வரியை விதித்தது.

அதற்கான கெடு வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது. இத்தகைய சூழலில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கண்ணாடி ஒளியிழைகளுக்கு மிகை இறக்குமதி தடுப்பு வரியை மீண்டும் விதிப்பது தொடா்பாக சீன வா்த்தக அமைச்சகம் வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டது. அப்போது, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒற்றை ஒளியைக் கடத்தும் கண்ணாடி இழைகள் மீதான இறக்குமதி வரியை நீக்கினால் கடும் பாதிப்பைச் சந்திக்க நேரிடும் என்று உள்ளூா் உற்பத்தியாளா்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

அதைத் தொடா்ந்து, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கண்ணாடி ஒளியிழைக்கான மிகை இறக்குமதி தடுப்பு வரியை மேலும் 5 ஆண்டுகளுக்கு விதிக்க சீன வா்த்தக அமைச்சகம் முடிவெடுத்தது. அதன்படி, ஒற்றை ஒளியைக் கடத்தும் கண்ணாடி இழைகள் மீது 7.4 சதவீதம் முதல் 30.6 சதவீதம் வரை மிகை இறக்குமதி தடுப்பு வரியை விதிக்க வா்த்தக அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT