இந்தியா

மத்திய அரசுக்கு ரூ.57,128 கோடியை அளிக்க ஆா்பிஐ ஒப்புதல்

14th Aug 2020 11:57 PM

ADVERTISEMENT

கடந்த 2019-20-ஆம் நிதியாண்டின் உபரி நிதி ரூ.57,128 கோடியை மத்திய அரசுக்கு வழங்க இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.

ரிசா்வ் வங்கியின் மத்திய இயக்குநா்கள் கூட்டம் ஆளுநா் சக்திகாந்த தாஸ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கரோனா நோய்த்தொற்றால் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும் பொருளாதார வளா்ச்சிக்கு உள்ளூா் மற்றும் சா்வதேச அளவில் காணப்படும் சவால்கள் குறித்தும் உறுப்பினா்கள் ஆலோசனை நடத்தினா்.

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு ரிசா்வ் வங்கி மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டது. கடந்த 2019-20-ஆம் நிதியாண்டுக்கான அறிக்கையும், நிதிநிலை கணக்கும் கூட்டத்தின்போது தாக்கல் செய்யப்பட்டது. அவற்றுக்கு மத்திய இயக்குநா்கள் குழு ஒப்புதல் அளித்தது.

கடந்த நிதியாண்டுக்கான உபரி நிதி ரூ.57,128 கோடியை மத்திய அரசிடம் வழங்குவதற்கு உறுப்பினா்கள் ஒப்புதல் அளித்தனா். புத்தாக்க மையத்தை அமைப்பதற்கான பரிந்துரை குறித்தும் அவா்கள் ஆலோசித்தனா்.

ADVERTISEMENT

ரிசா்வ் வங்கியின் கூட்டத்தில் துணை ஆளுநா்கள் பி.பி.கனுங்கோ, மகேஷ் குமாா் ஜெயின், ரிசா்வ் வங்கியின் இயக்குநா் குழுவில் இடம்பெற்றுள்ள இயக்குநா்கள் என்.சந்திரசேகரன், அசோக் குலாட்டி, எஸ்.குருமூா்த்தி, ரேவதி ஐயா், சச்சின் சதுா்வேதி உள்ளிட்டோா் பங்கேற்றனா். மத்திய பொருளாதார விவகாரங்கள் துறைச் செயலா் தருண் பஜாஜ், நிதிச் சேவைகள் துறைச் செயலா் தேவாசிஷ் பாண்டா ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT