இந்தியா

தமிழகத்துக்கு ரூ.3,000 கோடி தேவை: பிரதமரிடம் முதல்வர் வேண்டுகோள்

11th Aug 2020 01:01 PM

ADVERTISEMENT

புது தில்லி: கரோனா பேரிடரை எதிர்கொள்ள தமிழகத்துக்கு மத்திய அரசு இதுவரை ரூ.512 கோடியை ஒதுக்கியுள்ளது, இது எனது கோரிக்கையின்படி ரூ.3,000 ஆக உயர்த்தப்பட வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

கரோனா பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக முதல்வர் பழனிசாமி, அவசரகால நிலையை எதிர்கொள்ள மற்றும் மருத்துவ அமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு தமிழகத்துக்கு ஒதுக்கிய ரூ.712.64 கோடியில், இதுவரை இரண்டு தவணைகளாக ரூ.512.64 கோடி நிதி மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இது நான் முன்பு மத்திய அரசிடம் வலியுறுத்தியதைப்போல ரூ.3,000 கோடியாக உயர்த்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கரோனா தொற்றுக்கு எதிரான போரை எதிர்கொள்ள தமிழகத்துக்கு ரூ.9,000 கோடி சிறப்பு நிதியாக ஒதுக்கினால், அதன் மூலம் மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். அதேவேளை, 2020 ஏப்ரல் - ஜூன் காலகட்டத்துக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை முன்கூட்டியே வழங்கப்பட வேண்டும்.

ADVERTISEMENT

மாநில பேரிடர் மேலாண்மை நிதி முழுவதும் தீர்ந்துவிட்டதால், தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து ரூ.1,000 கோடியை உடனடியாக ஒதுக்க வேண்டும். நிலுவையில உள்ள நெல் கொள்முதல் மானியத் தொகை ரூ.1,312 கோடியை உடனடியாக விடுவித்தால், நெல் கொள்முதல் பணிகளை விரைவாக செயல்படுத்த பேருதவியாக இருக்கும் என்றும் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கரோனா பரவலின் தீவிரம் குறையாத நிலையில், கரோனா தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கும் தமிழகம் உள்பட 8 மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.

காலை 10:30 மணிக்கு காணொலி மூலம் தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, பிகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். 

அந்தந்த மாநிலங்களில் கரோனா பாதிப்பு நிலவரம், தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் பங்கேற்றுள்ளார்.

கரோனா பரவல் காரணமாக நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட பிறகு மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஏற்கனவே பல முறை ஆலோசனை நடத்தியுள்ள நிலையில், இன்று மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT