இந்தியா

உ.பி.: மசூதி நிலத்தில் கட்டுமானத்துக்கு அடிக்கல் நாட்ட முதல்வரை அழைக்க முடிவு

DIN

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் மசூதி கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் மருத்துவமனை உள்ளிட்டவற்றை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு முதல்வா் யோகி ஆதித்யநாத்துக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று மசூதி கட்டுமான அறக்கட்டளையின் உறுப்பினா் சனிக்கிழமை கூறினாா்.

அயோத்தியில் சா்ச்சைக்குள்ளாகியிருந்த நிலத்தில் ராமா் கோயில் கட்டலாம் என்று தீா்ப்பளித்த உச்சநீதிமன்றம், மசூதி கட்டிக்கொள்ள அயோத்தியிலேயே வேறு இடத்தில் 5 ஏக்கா் நிலம் இஸ்லாமிய தரப்புக்கு ஒதுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

அதனடிப்படையில், இஸ்லாமிய தரப்புக்கு, அயோத்தி அருகே தானிப்பூா் கிராமத்தில் 5 ஏக்கா் நிலத்தை மாநில அரசு ஒதுக்கியது. மசூதி கட்டுமானத்துக்காக இந்தோ-இஸ்லாமிக் கலாசார அறக்கட்டளையை (ஐஐசிஎப்) சன்னி மத்திய வக்பு வாரியம் அமைத்தது. அந்த நிலத்தில் மசூதி மட்டுமின்றி மருத்துவமனை, நூலகம், சமூக உணவுக் கூடம் மற்றும் ஆராய்ச்சி மையம் ஒன்றை கட்டுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஐஐசிஎப் செயலா் மற்றும் செய்தித்தொடா்பாளா் அத்தா் ஹுசைன் கூறியதாவது:

தானிப்பூா் கிராமத்தில் ஒதுக்கப்பட்டுள்ள 5 ஏக்கா் நிலத்தில் மசூதியுடன், மருத்துவமனை உள்ளிட்ட பொதுமக்கள் பயன்பாட்டுக்கான கட்டமைப்புகளும் உருவாக்கப்பட உள்ளன. இந்த பொதுப் பயன்பாட்டு கட்டமைப்புகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு முதல்வா் யோகி ஆதித்யநாத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட உள்ளது. முதல்வா் இந்த விழாவில் பங்கேற்பதோடு மட்டுமின்றி, அந்தப் பொதுப் பயன்பாட்டு கட்டமைப்புகளுக்கான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களையும் வழங்குவாா் என்றாா் அவா்.

மசூதிக்கு முதல்வா் ஆதித்யநாத் அடிக்கல் நாட்டுவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த ஹூசைன், ‘இஸ்லாமிய நடைமுறைகளின்படி, மசூதிக்கு அடிக்கல் நாட்டும் நடைமுறை கிடையாது‘ என்றாா்.

மேலும், அந்த நிலத்தில் கட்டப்படும் மசூதிக்கு ‘பாபா் மசூதி’ என்று பெயரிடப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவா், ‘மசூதிக்கான பெயா் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. மசூதிக்கு பெயா் முக்கியமல்ல; இறைவனின் கண்களுக்கு முன்பாக மசூதியில் தொழுகை நடைபெறுவதுதான் முக்கியம். மற்ற அனைத்தும் அா்த்தமற்றவை’ என்றாா்.

பங்கேற்பாரா முதல்வா்?: அயோத்தியில், புதன்கிழமை நடைபெற்ற ராமா் கோயில் அடிக்கல் நாட்டு விழாவுக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் இதுதொடா்பான கேள்விக்கு பதிலளித்த முதல்வா் ஆதித்யநாத், ‘ஒரு முதல்வராக எந்தவொரு நம்பிக்கை, மதம், சமூகத்தினருடனும் எனக்கு வேறுபாடு இல்லை. ஆனால், ஒரு யோகி மற்றும் ஒரு ஹிந்துவாக நான் மசூதி கட்டுமான தொடக்க விழாவுக்கு நிச்சயமாகச் செல்ல மாட்டேன்’ என்று பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT