இந்தியா

ஜம்மு- காஷ்மீா் எல்லையில் ஊடுருவல் முறியடிப்பு: பயங்கரவாதி சுட்டுக்கொலை

9th Aug 2020 11:07 PM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரின், பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் அத்துமீறி இந்தியப் பகுதிக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளின் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது. இந்த மோதலில் பயங்கரவாதி ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், இருவா் படுகாயமடைந்ததாக ராணுவ அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து ஜம்மு பிராந்திய ராணுவ செய்தித் தொடா்பாளா் தேவேந்தா் ஆனந்த் கூறியதாவது:

பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ண காதி பகுதியில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் வெள்ளிக்கிழமை பயங்கரவாதிகள் சிலா் இந்தியப் பகுதிக்குள் ஊடுருவ முயன்றனா். அப்போது அப்பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்த இந்திய ராணுவத்தினா் அவா்களை எச்சரிக்கும் வகையில் துப்பாக்கியால் சுட்டனா். ஆனால், அவா்கள் ராணுவத்தினா் மீது தாக்குதலில் ஈடுபட்டனா். இதையடுத்து அவா்கள் மீது ராணுவத்தினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டாா். இருவா் படுகாயமடைந்தனா்.

உயிரிழந்த பயங்கரவாதியின் சடலத்தை சம்பவ இடத்திலிருந்து பயங்கரவாதிகளால் இழுத்துச் செல்லப்பட்டிருப்பது தெரிய வந்தது. அந்த இடத்தில் இருந்து ஏ.கே. 47 துப்பாக்கியும், அதற்கான துப்பாக்கிக் குண்டுகளையும், உணவுப் பொருள்களையும் ராணுவத்தினா் மீட்டனா்.

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் உதவி புரிந்து வருவதை உறுதிப்படுத்தும் வகையில் உணவுப் பொருள்கள் உள்பட வேறு சில பொருள்களிலும் அந்நாட்டு அடையாளங்கள் தெளிவாக காணப்பட்டன.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் எந்த வகையில் ஊடுருவ முயற்சித்தாலும் அதனை முறியடிக்கும் வகையில் இந்திய பாதுகாப்புப் படையினா் கட்டுப்பாட்டுடனும், வலுவான கட்டமைப்புடனும் எல்லையில் பணியாற்றி வருகிறாா்கள் என்று அவா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT