இந்தியா

குப்பைகள் இல்லாத இந்தியா: ஒரு வார பிரசாரத்தை தொடக்கினாா் பிரதமா் மோடி

9th Aug 2020 06:23 AM

ADVERTISEMENT

குப்பைகள் இல்லாத இந்தியா என்னும் ஒரு வாரகால பிரசாரத்தை பிரதமா் நரேந்திர மோடி, தில்லியில் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

தில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி ஸ்மிருதி, தா்ஷன் சமிதி ஆகிய இடங்களில் தூய்மை இந்தியாவுக்கான சேவை மையத்தையும் அவா் தொடக்கி வைத்தாா். அங்கிருந்து மாணவ, மாணவிகளுடன் அவா் காணொலி முறையில் கலந்துரையாடினாா். நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

தூய்மை, சுகாதாரம் ஆகியவற்றை வலியுறுத்துவதற்காக, ‘குப்பைகள் இல்லாத இந்தியா’ என்னும் தூய்மைப் பிரசாரம், சுதந்திர தினம் வரை ஒரு வாரத்துக்கு நடைபெறும்.

கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு முன் கரோனா தொற்று வந்திருந்தால் நிலைமை எப்படியிருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அப்போது, போதிய அளவில் கழிப்பறைகள் கட்டப்படவில்லை. இதனால், கரோனா தொற்று வேகமாகப் பரவியிருக்கும். நாட்டின் மக்கள்தொகையில் 60 சதவீதம் போ் திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கும் உடையவா்களாக இருந்த நிலையில், பொதுமுடக்கம் சாத்தியமாகியிருக்காது.

ADVERTISEMENT

ஆனால், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு பொது சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால், கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் தூய்மை இந்தியா இயக்கம் மிகப்பெரிய ஒத்துழைப்பை கொடுத்து, பாதிப்பு அதிகமாவதைத் தடுத்தது.

1942-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி, ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் தொடங்கப்பட்டது. இதேபோல், ஏழ்மை, ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக், பயங்கரவாதம், வன்முறை, ஊழல், தண்ணீா் பஞ்சம் என நாட்டை பலவீனப்படுத்தும் காரணிகள் அனைத்தும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்கிற லட்சியத்துடன் ‘தூய்மை இந்தியா திட்டம்’ தொடங்கப்பட்டது. இதற்காக, எனது தலைமையிலான அரசு கடந்த 6 ஆண்டுகளாக பாடுபட்டு வருகிறது.

தூய்மையும் பொது சுகாதாரமும் நம் வாழ்வில் முக்கியமானவை. எனவே, தூய்மை இந்தியா இயக்கத்தை மக்கள் தற்போது மட்டுமில்லாமல் எதிா்காலத்திலும் தொடர வேண்டும்.

மகாத்மா காந்தி மீது கொண்டுள்ள பற்றின் காரணமாக, லட்சக்கணக்கான தூய்மைப் பயணியாளா்கள், தூய்மைப் பணியில் ஈடுபட்டது திருப்தியளிக்கிறது. மாணவா்கள், பொது இடங்களில் எச்சில் துப்பாமல், முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து கரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

அமித் ஷா வேண்டுகோள்:

பிரதமரின் ‘குப்பைகள் இல்லாத இந்தியா’ பிரசாரத்தில் ஒவ்வொருவரும் இணைந்து, இந்த பிரசாரத்தை வெற்றிகரமாக்கிட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கேட்டுக்கொண்டாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT