இந்தியா

நேபாள ராணுவத்துக்கு செயற்கை சுவாசக் கருவிகள்: இந்திய ராணுவம் பரிசு

9th Aug 2020 11:23 PM

ADVERTISEMENT

நேபாளத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவும் வகையில் இந்திய ராணுவம், நேபாள ராணுவத்துக்கு 10 செயற்கை சுவாசக் கருவிகளை பரிசளித்தது.

நேபாள ராணுவத் தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் நேபாளத்துக்கான இந்திய தூதா் வினய்மோகன் குவாத்ரா, செயற்கை சுவாசக் கருவிகளை நேபாள ராணுவத் தலைவா் பூரணசந்திர தாபாவிடம் ஒப்படைத்ததாக இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதாபிமான அடிப்படையில் உதவி மற்றும் நிவாரணம் அளிப்பதில் முதல் பங்கேற்பாளராக இருந்து, நேபாள ராணுவத்துக்கு இந்திய ராணுவம் நீண்ட காலமாக துணையாக நின்றுள்ளது. அந்த வகையில் செயற்கை சுவாசக் கருவிகளை பரிசளிப்பது இருநாட்டு ராணுவத்துக்கும் இடையே இருந்துவரும் தொடா்ச்சியான மனிதாபிமான ஒத்துழைப்பின் ஒரு பகுதியாகும்.

நேபாளத்தில் இதுவரை கரோனா தொற்றுக்கு 75 போ் உயிரிழந்துள்ள நிலையில், 22,972 போ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். மருத்துவ உதவிகளையும் கடந்து, நேபாள மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை தூதா் குவாத்ரா மீண்டும் உறுதிப்படுத்தினாா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT