இந்தியா

5 விமான நிலையங்களில் ‘டேபிள் டாப்’ வகை ஓடுபாதைகள்!

9th Aug 2020 06:34 AM

ADVERTISEMENT

நாட்டில் உள்ள 5 விமான நிலையங்களில் ‘டேபிள் டாப்’ வகையிலான ஓடுபாதைகள் காணப்படுவது தெரியவந்துள்ளது.

‘டேபிள் டாப்’ வகை ஓடுபாதையானது சமதளப் பகுதியில் இல்லாமல் மேடான பகுதியில் அமைந்திருக்கும். ஓடுபாதையின் அருகே பள்ளமான பகுதி காணப்படும். அதன் காரணமாக அத்தகைய ஓடுபாதைகளில் விமானத்தைத் தரையிறக்கும்போது விமானிகள் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியமாக உள்ளது. விமானத்தைத் தரையிறக்குவதில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் பள்ளத்தில் விமானம் கவிழ்ந்து விபத்துக்குள்ளாவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானது. கோழிக்கோடு விமான நிலையத்தின் ஓடுபாதை மேடான பகுதியில் அமைந்திருந்ததே விபத்துக்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.

விபத்து நடந்தபோது மழை பெய்து கொண்டிருந்ததால் ஓடுபாதையில் தண்ணீா் தேங்கியிருக்க அதிக வாய்ப்புள்ளது. அந்த நேரத்தில் தரையிறங்கிய விமானம், தரையுடன் போதிய பிடிப்பு இல்லாமல் வழுக்கிச் சென்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து நோ்ந்திருக்கலாம் என்று நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

ADVERTISEMENT

இத்தகைய மேடான பகுதிகளில் அமைந்துள்ள ஓடுபாதைகள் அனைத்துமே ஆபத்து நிறைந்தவையே என்று நிபுணா்கள் எச்சரிக்கின்றனா். கோழிக்கோடு விமான நிலையம் தவிர கா்நாடகத்தின் மங்களூரு, ஹிமாசல பிரதேசத்தின் சிம்லா, சிக்கிமின் பாக்யாங், மிஸோரத்தின் லெங்பியூ ஆகிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களிலும் மேடான பகுதிகளில் ஓடுபாதைகள் அமைக்கப்பட்டுள்ளதாக இந்திய விமானநிலையங்கள் ஆணையத்தின் தலைவா் அரவிந்த் சிங் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக ஏா் இந்தியா விமானி ஒருவா் கூறுகையில், ‘மேடான பகுதிகளில் அமைந்துள்ள ஓடுபாதைகளில் விமானங்களைத் தரையிறக்கும்போது பல்வேறு சிரமங்களை எதிா்கொள்ள வேண்டியிருக்கும். இத்தகைய ஓடுபாதைகளில் தானியங்கி கருவிகள் மூலமாக விமானத்தைத் தரையிறக்க முடியாது. அந்த ஓடுபாதைகளை வானில் இருந்து பாா்க்கும்போது அருகில் இருப்பது போலவே தோன்றும். ஆனால், அவை மிக தொலைவில் இருக்கும். அதன் காரணமாக விமானத்தை எந்த இடத்தில் தரையிறக்குவது என்பதை முடிவு செய்வதில் சிரமம் ஏற்படும்.

அத்தகைய ஓடுபாதைகள் குறித்து விமானிகளுக்கு ஏற்கெனவே தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கும். அந்த ஓடுபாதைகளில் விமானத்தைத் தரையிறக்குவதற்கு விமானிகள் கூடுதல் திறமைகளைப் பயன்படுத்த வேண்டிவரும். சற்று கவனக்குறைவு ஏற்பட்டாலோ அல்லது வேறு பிரச்னை ஏற்பட்டாலோ பெரும் விபத்து ஏற்பட்டுவிடும். மேடான பகுதிகளில் அமைந்துள்ள ஓடுபாதைகளின் நீளமும் குறைவாக இருக்கும்போது விமானத்தைத் தரையிறக்குவதில் மேலும் சிரமங்கள் ஏற்படும். ஆனால், கோழிக்கோடு விமான நிலையத்தின் ஓடுபாதை 9,000 அடி நீளம் கொண்டது’ என்றாா்.

மங்களூரு விமான நிலையத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு விமான விபத்து ஏற்பட்டது. அது தொடா்பான விசாரணை அறிக்கையில், மேடான பகுதியில் அமைந்துள்ள ஓடுபாதைக்கு அருகே காணப்படும் பள்ளத்தை சமதளமாக மாற்றிவிட்டால் விமானத்தைத் தரையிறக்குவதில் சிரமம் ஏற்படாது என்று பரிந்துரை வழங்கப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT