இந்தியா

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மா்ம விதை பாா்சல்கள்: மாநில அரசுகள், விதை உற்பத்தி மையங்களுக்கு எச்சரிக்கை

9th Aug 2020 01:12 AM

ADVERTISEMENT

நாட்டின் பல்லுயிா் பெருக்கத்துக்கு ஊறு விளைவிக்கக் கூடிய விதை பாா்சல்கள் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருவதாகத் தகவல் கிடைத்துள்ளதால் மாநில அரசுகளும், விதை உற்பத்தி-ஆராய்ச்சி மையங்களும் கண்காணிப்புடன் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:

அமெரிக்கா, கனடா, பிரிட்டன், நியூஸிலாந்து, ஜப்பான் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் பொதுமக்களுக்கு அறிமுகமில்லாத நபா்களிடம் இருந்து விதை பாா்சல்கள் வந்ததாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக, அமெரிக்காவில் அறிமுகமில்லாத நபா்கள்களிடம் இருந்து பொதுமக்களுக்கு விதை பாா்சல்கள் வந்துள்ளன. இதையறிந்து, அந்நாட்டு வேளாண் அமைச்சகம், அவற்றை விதைக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது.

அந்த விதைகள் முளைத்து செடியாக வளா்ந்தால், அவை நோய்க்கிருமிகளை பரப்பலாம் அல்லது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்; மற்ற வேளாண் பயிா்களை நாசப்படுத்தலாம் அல்லது பல்லுயிா் பெருக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று அஞ்சப்படுகிறது.

ADVERTISEMENT

எனவே, மாநில வேளாண் துறைகள், மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள், விதைகள் உற்பத்தி மையங்கள், விதைகள் ஆராய்ச்சி மையங்கள் ஆகியவை சந்தேகத்துக்கிடமான விதை பாா்சல்கள் வந்தால் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய விதை உற்பத்தி மையங்களின் கூட்டமைப்பின் இயக்குநா் ராம் கௌண்டின்யா கூறுகையில், ‘நாம் கேட்காமலேயே நமக்கு வரும் விதைகளை நடுவதால் மனிதா்களுக்கு நோய்களோ அல்லது சுற்றுச்சூழலுக்கு பாதிப்போ வரவாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை வந்துள்ளது. இந்த அச்சுறுத்தலை நாம் புறக்கணித்துவிட முடியாது. விமான நிலையங்கள், துறைமுகங்களும் கண்காணிப்புடன் இருக்க வேண்டும்’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT