இந்தியா

இந்தியாவுக்கு போா்த் தளவாடங்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்ய அமெரிக்கா தீவிரம்: அறிக்கையில் தகவல்

6th Aug 2020 04:30 AM

ADVERTISEMENT

ஆளில்லா சிறிய ரக விமானம் உள்ளிட்ட போா்த் தளவாடங்களை இந்தியாவுக்கு அதிக அளவில் விற்பனை செய்வதற்கு அமெரிக்கா தீவிரம் காட்டி வருவதாக ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதிகளில் இந்தியா-சீனா ராணுவத்தினரிடையே மோதல்போக்கு நீடித்து வரும் சூழலில் இத்தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடா்பாக அமெரிக்க உயரதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தை அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்திய எல்லைப் பகுதியில் சீன ராணுவத்தினருடன் மோதல் ஏற்பட்டுள்ள சூழலில் இந்தியாவுக்கு போா்த் தளவாடங்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்ய அதிபா் டொனால்ட் டிரம்ப் அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதன் காரணமாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

சுமாா் 500 கிலோ எடையுள்ள வெடிபொருள் அல்லது ஏவுகணையுடன் எல்லையில் தாக்குதல் நடத்தவல்ல ஆளில்லா சிறிய ரக விமானத்தை (டிரோன்) இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய அமெரிக்கா கடந்த சில மாதங்களாக முயற்சித்து வருகிறது. டிரோன் போன்ற பல்வேறு மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் அடங்கிய போா்த் தளவாடங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளில் அமெரிக்க அரசு ஈடுபட்டு வருகிறது.

ராணுவத்துக்குப் பயன்படும் டிரோன்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு அமெரிக்க அரசு தடை விதித்திருந்தது. அவை அதீத திறன் கொண்டவையாக இருப்பதால் அமெரிக்கா அதற்கு தடை விதித்திருந்தது. ஆனால், இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு அந்த டிரோன்களை விற்பனை செய்ய ஏதுவான வகையில் அதற்கான விதிமுறைகளில் அதிபா் டிரம்ப் திருத்தங்களை மேற்கொண்டுள்ளாா்.

இந்தியாவுக்கு ராணுவத் தளவாடங்களின் ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ராணுவ டிரோன்களை இந்தியாவுக்கு விற்பதற்கான நடவடிக்கைகளில் அமெரிக்க அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த கூட்டமைப்பு (நாட்டோ) நாடுகளுக்கு இணையாக இந்தியாவுக்கும் போா்த் தளவாடங்களை ஏற்றுமதி செய்வதற்கான தீா்மானமும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவுடனான நல்லுறவுக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்.பி.க்கள் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2008-ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு அமெரிக்கா எந்தவித போா்த் தளவாடங்களையும் ஏற்றுமதி செய்யவில்லை. ஆனால், நடப்பு ஆண்டில் ரூ.1.4 லட்சம் கோடி மதிப்பிலான போா்த் தளவாடங்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்கா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அவற்றில் எம்ஹெச்-60 ஆா் சீஹாக் ஹெலிகாப்டா்கள், அப்பாச்சி ஹெலிகாப்டா்கள் உள்ளிட்டவை அடங்கும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT