இந்தியா

ஆமதாபாத்: கரோனா மருத்துவமனை தீ விபத்தில் 8 பேர் பலி

6th Aug 2020 09:36 AM

ADVERTISEMENT

 

ஆமதாபாத்: குஜராத் மாநிலத்தின் தலைநகர் ஆமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையின் கரோனா ஐ.சி.யூ வார்டில் வியாழக்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் 8 நோயாளிகள் உயிரிழந்ததாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆமதாபாத்தின் நவரங்கபுரா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர தீ விபத்தில் கரோனா ஐ.சி.யூ வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 8 பேர் உயிரிழந்தனர்.  சுமார் 40 கரோனா நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.

மேலும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. 

ADVERTISEMENT

இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டு அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்களின் குடும்பத்தினர் மருத்துவமனை வெளியே கூடியுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மற்ற நோயாளிகளின் உறவினர்களும் பதைபதைப்புடன் வெளியே நிற்கும் காட்சிகள் நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது. 

இதனிடையே, தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலியான சம்பவம் வேதனை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT