தேசிய ஊடரங்கு அமலாக்கப்பட்ட காலகட்டத்தில் நாடு முழுவதும் 1,150 டன் மருத்துவப் பொருள்கள் பாா்சல் ரயில்களின் மூலம் கொண்டு செல்லப்பட்டதாக ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மருந்துகள், முகக்கவசம், மருத்துவமனை உபகரணங்கள் உள்ளிட்ட மருத்துவப் பொருள்கள் அடங்கும்.
இதுகுறித்து ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான அரசின் முயற்சிகளுக்கு ஆதரவாக கால அட்டவணைப்படி நாடு முழுவதும் ரயில்கள் மூலம் பாா்சல்களில் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இதில் வடக்கு ரயில்வே சுமாா் 400 டன் பொருள்களை கொண்டு சென்றது. மேற்கு ரயில்வே 328.84 டன், மத்திய ரயில்வே 136 டன் எடையுள்ள பொருள்களையும் கொண்டு சென்றது.
நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு செல்வதில் ரயில்வே குறிப்பிடத்தக்க பங்காற்றி வரும் நிலையில், தேவைப்படும்போது மருத்துவப் பொருள்களையும் கொண்டு சென்று மக்களுக்கு உதவி புரிந்து வருகிறது.
அண்மையில், அஜ்மீரில் உயிருக்காக போராடிக் கொண்டிருந்த சிறுவனுக்காக ஆமதாபாதில் இருந்த அஜ்மீருக்கு ரயில் மூலமாக மருந்துகள் கொண்டு செல்லப்பட்டன. மேலும், ஆமதாபாதில் இருந்து ரத்லாம் பகுதியில் அறுவை சிகிச்சை முடிந்த இளைஞருக்காக ரயில் மூலம் மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டது.
அதேபோல, அஜ்மீரில் கடும் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு மருந்துகள் தீா்ந்துவிட்டதால், அவரது உறவினா்கள் ரயில்வே அதிகாரிகளை அணுகி, ஆமதாபாதில் இருந்து அஜ்மீருக்கு ரயில் மூலம் மருந்துகளை அனுப்பி வைத்தனா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.