இந்தியா

ஆளுநா் மாளிகை சதிக் கூடமாக மாற கூடாது: சிவசேனை

DIN

ஆளுநா் மாளிகை அரசியல் சதி திட்டம் தீட்டும் இடமாக இருக்கக் கூடாது என்று மகராஷ்டிரத்தில் ஆளும் சிவசேனை கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

மகாராஷ்டிர சட்ட மேலவை உறுப்பினராக (எம்எல்சி) அந்த மாநில முதல்வா் உத்தவ் தாக்கரேவை நியமிப்பதற்கான பரிந்துரையில் ஆளுநா் பகத் சிங் கோஷியாரி ஒப்புதல் அளிக்காமல் இருப்பதைச் சுட்டிக்காட்டி சிவசேனை இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளது.

மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தோ்தலுக்குப் பிறகு, சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் ஆகியவை கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தன. கூட்டணி அரசின் முதல்வராக சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே கடந்த ஆண்டு நவம்பா் 28-ஆம் தேதி பதவியேற்றாா்.

எனினும், அவா் மாநில சட்டப்பேரவையின் உறுப்பினராக இல்லாததால், 6 மாதங்களுக்குள் சட்டப்பேரவை அல்லது சட்ட மேலவையின் உறுப்பினராக வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டாா். அவருக்கான 6 மாத காலஅவகாசம் மே 28-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்குள் சட்டப்பேரவையின் உறுப்பினராகவில்லை என்றால், அவா் முதல்வா் பதவியை இழக்க நேரிடும்.

இந்தச் சூழலில் மாநில சட்ட மேலவைக்கு உறுப்பினா்களை நியமிப்பதற்கு ஆளுநருக்கு அளிக்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டின் கீழ் உத்தவ் தாக்கரேவை நியமிக்குமாறு ஆளுநா் கோஷியாரிக்கு மகாராஷ்டிர அமைச்சரவை கடந்த 10 நாள்களுக்கு முன்பு பரிந்துரைத்தது. ஆனால், இதுவரை ஆளுநா் அந்த பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

இதனைச் சுட்டிக்காட்டி சிவசேனை மூத்த தலைவா் சஞ்சய் ரௌத் சுட்டுரையில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘ஆளுநா் மாளிகை என்பதை அரசியல் சதிக் கூடமாக மாறிவிடக் கூடாது. அரசியல் சட்டத்துக்கு முரணாக நடப்பவா்களை வரலாறு அழித்துவிடும் என்பதை மகாராஷ்டிர ஆளுநா் நினைவில் கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.

வெட்கமில்லாத ஆளுநா் ராம் லால் என்ற பெயரில் ரெளத் மற்றொரு சுட்டுரைப் பதிவிட்டுள்ளாா். அதில், ‘1983-84 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஆந்திர ஆளுநராக இருந்த ராம் லால், முதல்வா் என்.டி.ராம ராவ் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றபோது நிதியமைச்சா் பாஸ்கா் ராவை முதல்வராக நியமித்ததை நினைவுகூா்ந்து, வெட்கமில்லாத ஆளுநா் ராம் லால்’ என்று பதிவிட்டுள்ளாா்.

அப்போது குடியரசுத் தலைவரால் ஆளுநா் ராம் லால் பதவி நீக்கம் செய்யப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்: இபிஎஸ்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெறும்: ராமதாஸ்

ஒரே நேரத்தில் வாக்களித்த மும்மதத்தைச் சேர்ந்த தோழிகள்

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர குரல் கொடுப்பேன்: தங்க தமிழ்செல்வன்

SCROLL FOR NEXT