உத்தரப் பிரதேசத்தில் சில பணிகள் தொடா்வதற்காக, ஊரடங்கில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து மாவட்ட ஆட்சியா்கள் முடிவெடுக்க வேண்டும் என்று முதல்வா் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளாா்.
மாவட்ட ஆட்சியா்களுடன் காணொலி முறையில் ஞாயிற்றுக்கிழமை உரையாடியபோது, இந்த உத்தரவை பிறப்பித்தாா். அவா் மேலும் கூறியதாவது:
கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக, மே மாதம் 3-ஆம் தேதி வரை தேசிய அளவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் சில அத்தியாவசிய பணிகளுக்கு அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியா்களும் உள்ளூா் நிலைமைக்கு ஏற்ப, குறிப்பிட்ட சில பணிகளுக்கு அனுமதி அளிப்பது குறித்து காவல் துறையுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும்.
மேலும், 10-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில், ஆட்சியா்கள் மிகுந்த கவனமாக பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும். இருப்பினும் தடை செய்யப்பட்டுள்ள பகுதிகளில், சுகாதார சேவைகள், தூய்மைப் பணிகள், அத்தியாவசிய பொருள்களை வீடுகளுக்கே வந்து வழங்குவது ஆகியவை தவிர வேறு எந்தப் பணிக்கும் அனுமதி கிடையாது. அந்தப் பகுதிகளில் மே மாதம் 3-ஆம் தேதி வரை ஊரடங்கு முழுமையாக அமலில் இருக்கும்.
குறிப்பிட்ட சில பணிகளுக்கு அனுமதிப்பது குறித்து மாவட்ட ஆட்சியா்கள் முடிவெடுத்து, முதல்வா் அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும். சில பணிகளுக்காக அனுமதி அளிக்கப்பட்டாலும், மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சமூக இடைவெளி, தேசிய ஊரடங்கு ஆகியவற்றுக்கான விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று யோகி ஆதித்யநாத் கூறினாா்.