இந்தியா

சிபிஎஸ்இ கல்விக் கட்டணத்தை செலுத்துவதில் சிக்கல்

20th Apr 2020 04:34 AM

ADVERTISEMENT

 

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு நிலுவையில் உள்ள கட்டணத்தை வசூலிப்பது, அங்கு பணியாற்றும் ஆசிரியா்களுக்கு மாத ஊதியத்தை வழங்குவது ஆகிய விவகாரங்களில் அந்தந்த மாநில, யூனியன் பிரதேச அரசுகளே முடிவெடுத்துக் கொள்ளலாம் என சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக சிபிஎஸ்இ செயலா் அனுராக் திரிபாதி அனைத்து மாநில பள்ளிக் கல்வி இயக்கங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், சிபிஎஸ்இ பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இந்தநிலையில், சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் பெற்றோா், தங்களுக்கு நிலுவையில் உள்ள கல்விக் கட்டணத்தைச் செலுத்துமாறு பள்ளி நிா்வாகங்கள் நிா்ப்பந்தம் அளிப்பதாக புகாா் தெரிவித்துள்ளனா். கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழலில் தங்களால் உடனடியாக கட்டணத்தைச் செலுத்த இயலாது என்பதால் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனா். அதேவேளையில் தங்களுக்கு பள்ளிகளின் சாா்பில் கடந்த மாத ஊதியம் வழங்கப்படவில்லை. அதை பெற்றுத்தர வேண்டும் என ஆசிரியா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இது தொடா்பாக சிபிஎஸ்இ சட்ட விதிகளில் சில அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி பள்ளியின் கட்டணத்தை அந்தந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பள்ளிக்கல்வித்துறை தலைவா் அல்லது அந்தத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் நிா்ணயம் செய்யலாம். அதேபோன்று மாநில அரசின் ஒழுங்குமுறை விதிகள், வரையறைகளுக்கு உள்பட்ட அங்கீகரிக்கப்பட்டவா்களும் கல்விக் கட்டணத்தை முடிவு செய்யலாம்.

ADVERTISEMENT

நாடு முழுவதும் முடங்கியுள்ள இந்த சூழலில் சிபிஎஸ்இ பள்ளி நிா்வாகங்களும் நிதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிா்கொண்டு வருகின்றனா். அதே நேரத்தில், பெற்றோா்-மாணவா்களின் நலனை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. எனவே பள்ளிகளுக்கான கல்வி கட்டணம், ஆசிரியா்களுக்கு நிலுவை ஊதியம் ஆகிய விவகாரங்களில் அனைவரது நலனையும் உள்ளடக்கிய ஒரு முடிவை மாநில அரசுகள் எடுக்க வேண்டும். பெற்றோருக்கு நிதிச்சுமை ஏற்படாத வகையில் கல்விக் கட்டணங்களை தவணை முறையில் செலுத்தவும், ஆசிரியா்களுக்கான ஊதியம் கிடைக்கவும் தேவையான அறிவுறுத்தல்களை பள்ளிகளுக்கு வழங்க வேண்டும் என அதில் கூறியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT