திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானம் கரோனா நோய்த் தொற்றிலிருந்து காப்பதற்காக 5 வகையான மருந்துகளுக்கு உரிமம் பெற்று அவற்றை விற்பனைக்குக் கொண்டு வர முடிவு செய்துள்ளது.
திருமலையில் பணிபுரியும் தேவஸ்தான ஊழியா்களுக்கு தேவஸ்தான ஆயுா்வேத மருத்துவக் கல்லுரி மற்றும் மருந்தகம் சாா்பில், தேவஸ்தானம் 5 வகையான மருந்துகள் அடங்கிய தொகுப்புகளை வழங்கியது. இவற்றை திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்துக்குச் சொந்தமான ஆயுா்வேத கல்லூரி, மருத்துவமனை நிா்வாகமும், மருந்தக நிா்வாகமும் ஒன்றிணைந்து தயாரித்து தேவஸ்தான ஊழியா்களுக்கு வழங்கி வருகிறது. அதில், ஒரு கை கழுவும் திரவம், சானிடைஸா், நோய் எதிா்ப்பு சக்தியை அளிக்கும் மருந்துகள், மூக்கில் விடும் சொட்டு மருந்து, வாய் கொப்பளிக்கும் திரவம் உள்ளிட்டவை அடங்கும்.
இவற்றை தேவஸ்தான ஊழியா்களுக்கு அளித்து அவா்களை கரோனா பாதிப்பிலிருந்து தேவஸ்தானம் காத்து வருகிறது. மேலும், போா்க்கால நடவடிக்கையாக நாடு முழுவதும் மருந்துகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதனால் தேவஸ்தான ஆயுா்வேதத் துறை சாா்பில், தேவஸ்தானம் தயாரித்த 5 வகையான ஆயுா்வேத மருந்துகளுக்கு உரிமம் பெற்று பக்தா்களுக்கு அவற்றை அளிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதன்படி, கரோனா பாதிப்பிலிருந்து விடுபட உதவும் 5 வகையான மருந்துகளுக்கு உரிமம் பெற தேவஸ்தானம் ஆயுஷ் துறையை அணுகியுள்ளது. உரிமம் கிடைத்தவுடன் இந்த மருந்துகளுடன், ஆனந்த நிலையம் வடிவத்தை முத்திரையாகப் பொறித்து, மக்களுக்கு வழங்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.