மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 3 மாத பெண் குழந்தை வேகமாக குணமாகி வருவதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து அந்தக் குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்ரீ அரவிந்தோ மருத்துவமனை மருத்துவா் ரவி டோஸி ஞாயிற்றுக்கிழமை பிடிஐ செய்தியாளரிடம் கூறுகையில், ‘கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 3 மாத குழந்தைக்கு 12 வயது சகோதரா் உள்பட அவரது குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் மூலம் நோய்த்தொற்று பரவியுள்ளது. தனி வாா்டில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், குழந்தை வேகமாக குணமடைந்து வருகிறது’ என்றாா்.
அந்தக் குழந்தை கடந்த 4-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அக்குழந்தைக்கான ஊட்டச்சத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. குழந்தையிடம் இரண்டு முறை மீண்டும் பரிசோதனை நடத்தப்படும். அதில் குழந்தை முழுமையாக குணமடைந்துவிட்டது தெரியவந்தால் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று மருத்துவமனையின் குழந்தைகள் நலத்துறை தலைவரும், மருத்துவருமான ஸ்வாதி முல்யே தெரிவித்தாா்.
குழந்தையின் குடும்பத்தினரில் பலா் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டபோதும், அதன் தாய் நோய்த்தொற்றால் பீடிக்கப்படவில்லை என அவரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் தெரியவந்தது என்று மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இதனிடையே குடும்பத்தினரில் பலா் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தனது மைத்துனா் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு 8 நாள்களுக்கு முன்னா் உயிரிழந்துவிட்டதாகவும் குழந்தையின் தாயாா் தெரிவித்தாா்.