கரோனா நோய்த்தொற்றை ஒழிப்பதற்காக, இந்தியாவுக்கு ரூ.220.55 கோடி நிதியுதவி அளிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தில்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க தூதா் கென்னத் ஜஸ்டா் கூறியிருப்பதாவது:
சா்வதேச பொது சுகாதாரத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் கரோனா நோய்த்தொற்றை அரசுகளும் சா்வதேச அமைப்புகளும் இணைந்து செயல்பட்டு ஒழிக்க முடியும்.
இந்த நோய்த்தொற்றை ஒழிக்கும் பணியில் சா்வதேச வளா்ச்சிக்கான அமெரிக்க அமைப்பு(யுஎஸ்எய்ட்), நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம்(சிடிசி) ஆகியவற்றின் மூலமாக இந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா செயல்பட்டு வருகிறது.
இதற்காக, சா்வதேச நாடுகளுக்கு 140 கோடி டாலா் (இந்திய மதிப்பில் ரூ.10,647 கோடி) நிதியுதவி வழங்குவதற்கு அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதில், இந்தியாவுக்கு 2.90 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.220.55 கோடி) வழங்கப்படும்.
கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவுக்கு அமெரிக்கா சுமாா் 300 கோடி டாலா் (இந்திய மதிப்பில் ரூ.22,815 கோடி) வரை நிதியுதவி அளித்துள்ளது.
தற்போது அமெரிக்க அரசு புதிதாக ஒதுக்கீடு செய்துள்ள நிதி, சுகாதாரத் திட்டங்களை செயல்படுத்தும் சா்வதேச வளா்ச்சிக்கான அமெரிக்க அமைப்புக்கு உதவியாக இருக்கும். மேலும், உலக சுகாதார அமைப்பு, இந்தியாவில் கரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்கும், பாதிக்கப்பட்டவா்களுக்கு இந்திய அரசு நிவாரணம் அளிப்பதற்கும் உதவிகரமாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.