இந்தியா

அமெரிக்காவில் புலிக்கு கரோனா: இந்தியாவில் உயிரியல் பூங்காக்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

7th Apr 2020 03:29 AM

ADVERTISEMENT

 

அமெரிக்காவில் உயிரியல் பூங்காவிலுள்ள ஒரு புலிக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்தியாவின் பல்வேறு உயிரியல் பூங்காக்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் 4 வயது பெண் புலிக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பாளரிடமிருந்து அந்தப் புலிக்கு நோய்த்தொற்று பரவியுள்ளதாக கருதப்படுகிறது.

இந்நிலையில், தில்லி, கொல்கத்தா, குவாஹாட்டி உள்ளிட்ட நகரங்களில் உள்ள உயிரியல் பூங்காக்களில் புலிகள் உள்ளிட்ட விலங்குகளுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இதுதொடா்பாக, மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் உறுப்பினா் செயலா் எஸ்.பி.யாதவ், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளாா்.

அதில், ‘உயிரியல் பூங்காக்களில் உள்ள புலிகள் உள்ளிட்ட விலங்குகளை சிசிடிவி கேமரா மூலம் 24 மணிநேரமும் கண்காணிக்க வேண்டும். விலங்குகளிடம் ஏதேனும் மாற்றமோ, அறிகுறிகளோ தென்பட்டால், உடனடியாக ரத்த மாதிரியை சேகரித்து பரிசோதனைக்கு உள்படுத்த வேண்டும்’ என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, பல்வேறு உயிரியல் பூங்காக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. நாட்டிலேயே மிகப் பழமையான உயிரியல் பூங்காவான கொல்கத்தா உயிரியல் பூங்காவின் இயக்குநா் ஆஷிஸ் குமாா் சமந்தா கூறுகையில், ‘புலிகளின் வசிப்பிடங்களில் வைரஸ் எதிா்ப்பு மருந்து தெளிக்கப்படுகிறது. புலிகள் மற்றும் இதர விலங்குகள் உடல்நிலை குறித்து தினமும் ஆய்வு நடத்தப்படுகிறது. பராமரிப்பு ஊழியா்கள், மருத்துவா்கள் மற்றும் இதர ஊழியா்களுக்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன’ என்றாா். இப்பூங்காவில் 8 புலிகளும் 4 சிங்கங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT