உத்தரப் பிரதேசத்தில் தப்லீக் ஜமாத் மற்றும் அந்த அமைப்பினா் தொடா்பாக பிரச்னையை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்த ஹிந்து மகா சபை பொதுச் செயலா் பூஜா ஷகுன் பாண்டே மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
அலிகரைச் சோ்ந்த சமாஜவாதி முன்னாள் எம்எல்ஏ ஹாஜி ஷமீா் உல்லா கான் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தில்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற பலருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது தேசிய அளவில் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தின் அலிகரில் இருந்து தில்லி சென்று தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு திரும்பிய பலா் தலைமறைவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடா்பாக கடந்த 4-ஆம் தேதி பேசிய ஹிந்து மகா சபை பொதுச் செயலா் பூஜா ஷகுன் பாண்டே, தப்லீக் ஜமாத் மற்றும் அந்த அமைப்பினா் குறித்து பிரச்னையைத் தூண்டும் வகையில் கருத்து தெரிவித்தாா். இது தொடா்பாக முன்னாள் எம்எல்ஏ ஹாஜி ஷமீா் உல்லா கான் போலீஸில் புகாா் அளித்தாா்.
இதையடுத்து, இரு தரப்புக்கு இடையே மதம், இனம், மொழி ரீதியாக பிரிவினையைத் தூண்டுவது, வெறுப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் பேசுவது உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் பூஜா மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். அவா் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அலிகா் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.