புது தில்லி: ஐம்பது வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் சிறைகளில் இருந்து விடுவிக்க உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும் சமூக செயற்பாட்டாளருமான அமித் சானி மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவி வருவதால், பாதிப்பிற்கு உள்ளாகாமல் இருக்க சிறைகளில் உள்ள ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் தீவிர நோய் பாதிப்பிற்கு உள்ளனவர்களை விடுவிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவானது தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வின் முன் செவ்வாயன்று விசாரனைக்கு வந்தது.
அப்போது இந்த மனுவின் மீது பொதுவாக எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று மறுத்து விட்ட நீதிமன்றமானது, இம்மனு மீது மாநில அரசுகள் மற்றும் சிறை நிர்வாகங்கள், தங்கள் முன் சமர்பிக்கப்படும் தனித்தனியான மனுக்கள் மீது உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறி வழக்கினை முடித்து வைத்தது.